சிசேரியன் சிகிச்சையின் பின்னர் உயிரிழந்த பெண்!மருந்து பயன்பாடு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
பேராதனை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சை பெற்ற பின்னர் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மட்டத்திலும் வைத்தியசாலை மட்டத்திலும் இரண்டு விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.
நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்து
பேராதனை-கன்னோறுவ முருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்துனி மதுஷானி (வயது 27) என்ற பெண்ணே தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கச் சென்ற வேளையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவிக்கையில்,
இந்த மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துகளை வெளியிட்டாலும், விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிடலாம்.
இந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பயன்படுத்தப்பட்ட மருந்து,பதிவு செய்யப்படாத நிறுவனத்திடம் இருந்து பெறப்படவில்லை என்றும், இது வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்து என்றும் இயக்குநர் கூறினார்.
சிசேரியன் செய்து மூன்று நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண் இறந்துவிட்டார்.ஆனால் பிறந்த குழந்தை நலமுடன் இருக்கின்றது.”என தெரிவித்துள்ளார்.
சகோதரரின் கருத்து
இதேவேளை இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சை பெற்று அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது சகோதரி உயிரிழந்ததாக பெண்ணின் மூத்த சகோதரர் திவங்க மதுரங்க (38)தெரிவித்துள்ளார்.
மேலும்,தனது சகோதரியின் இறுதிக் கிரியைகள் செய்யப்பட்ட பின்னர் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்