பாக்கிஸ்தான் பிரதமரின் இலங்கைக்கான விஜயம் இந்திய அரசாங்கத்திற்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாது
எதிர்வரும் 22ஆம் திகதி பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கைக்கான விஜயம் இந்திய அரசாங்கத்திற்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் அப்படி அமைந்து விடுமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நுவரெலியாவில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான ஒரு நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் கொழும்பு துறைமுகம் தொடர்பான ஏற்பட்டுள்ள முறுகல் நிலையாகும்.
ஏற்கனவே இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு தயாராக இருந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்ட பல்வேறு தரப்பினரின் இந்திய எதிர்ப்பு போராட்டம் காரணமாக இந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்பொழுது இந்தியா தொடர்பாக இலங்கையில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு நிலையில் பாக்கிஸ்தான் பிரதமரின் இலங்கைக்கான திடீர் விஜயம் பல கேள்விகளை எழுப்புகின்றது.
பாக்கிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயமானது இந்தியாவிற்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாது. ஏனெனில் இந்தியா என்பது எமது குடும்பத்தில் ஒருவர் போல. பல்வேறு இக்கட்டான சந்தரப்பங்களிலும் இந்தியாவின் உதவி எமக்கு கிடைத்துள்ளது.
குறிப்பாக அது யுத்த காலமாக இருந்தாலும் சரி, யுத்தத்தின் பின்பாக இருந்தாலும் சரி, சுனாமியின் போதும் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு இலங்கை சுற்றுலா துறைக்கு பாதுகாப்பான நாடு இல்லை என சர்வதேசம் குறிப்பிட்டிருந்த நிலையிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை பாதுகாப்பான நாடு என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துரைத்துள்ளார்.
அதன் பின்பே எங்களுடைய நாட்டின் சுற்றுலா துறை படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்தது. எனவே இந்தியா என்ற நாட்டை நாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பகைத்துக் கொள்வது என்பது பிழையான ஒரு அரசியல் நகர்வாகும்.
ஏனெனில் தொடர்ந்தும் நாம் இந்தியாவுடன் நல்லுறவுடன் பயணிக்காவிட்டால் அது எமக்கு பொருளாதாரம் உட்பட இன்னும் பல வழிகளிலும் எமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்தியா என்பது இலங்கையில் பல்வேறு அபிவிருத்திகளுக்காக பாரிய நிதியினை வழங்கி வருகின்றது.
குறிப்பாக மலையக பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் மூலமாக முன்னெடுக்கப்படுகின்ற இந்திய வீடமைப்பு திட்டம் மலையகம் உட்பட அனைத்து பகுதிகளிலும் பாடசாலைகள், ஆசிரியர் பயிற்சி கலாசலைகள் தொடர்பான அபிவிருத்தி என்பன முக்கிய இடங்களை பெறுகின்றன.
இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையில் கலை கலாச்சாரம் பாரம்பரியமான தொடர்புகள் இருந்து வருகின்றது.
இந்திய அரசாங்கம் இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்தியாவில் இரட்டை பிரஜா உரிமையை வழங்கி வருகின்றது. இப்படி பல வழிகளிலும் இந்தியா இலங்கைக்கான உதவிகளை செய்து வருகின்றது.
இந்த விடயங்கள் அனைத்தையும் நாம் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். பாக்கிஸ்தான் பிரதமரின் விஜயம் இந்தியாவிற்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாது.
இன்றைய இந்த சூழ்நிலையில் அவருடைய விஜயமானது பொருத்தமற்ற ஒரு விடயமாகவே கருத வேண்டியுள்ளது என வலியுறுத்தியுள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 8 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
