தெரியாத வழியும் கிடைக்காத சமஸ்டியும்
இலங்கைத் தீவில் கடந்த ஒரு நூற்றாண்டு கால ஈழத் தமிழர் அரசியல் என்பது தொடர் தோல்விகளை மட்டும் சம்பாதிக்கவில்லை.மாறாக தாயக பரப்பில் தமிழ் மக்களின் இருப்பு நிலையையும் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது.
பௌத்த மதத்தினுாடான தமிழர் தாயக நில ஆக்கிரமிப்பு மிகவேகமாக முன்னேடுக்கப்படும் இன்றைய நிலையில் அடுத்த நூற்றாண்டில் இலங்கை தீவில் தமிழ் மக்களின் வாழ்வு நிச்சயமற்றதாக தோன்றத் தொடங்கி இருக்கிறது.
இந்தச் சூழலில், இலக்கில் தெளிவின்றி, வழி தெரியாத, இலக்குத் தெரியாத, போராடத் தெரியாத அல்லது போராடாத தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக் கொடுக்கப் போகிறன? இதுவே தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்ற பிரதான வினாவாக உள்ளது.
சமஸ்டி கோரிக்கை
இன்று தமிழர் தாயகத்தில் தமிழ் தேசியம் பேசுகின்ற மூன்று அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற அரசியல் நடத்துகின்றன.அதில் தமிழரசு கட்சி “சமஸ்டி”(federal) கோரிக்கையை முன் வைக்கிறது.
அதேநேரம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் தேர்தல் அரசியலில் “ஒரு நாடு இரு தேசம்“ என்ற அடிப்படையில் தேசங்களின் கூட்டு என்று இதுவும் சமஸ்டியையே கோருகிறது.
விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உள்ளக சுயநிலை அடிப்படையிலான “கூட்டாட்சி“(confederation) அதாவது விரிவான சமஸ்டியையே கோருகிறது.
இந்த அடிப்படையில் இம்மூன்று கட்சிகளும் அரசறிவியல் கோட்பாட்டு அடிப்படையில் சமஸ்டியையே கோருகின்றன என்ற முடிவிற்கு வரலாம்.
ஆனால் இவர்கள் எல்லோரும் முன்வைக்கின்ற இலக்கான சமஸ்டி தீர்வை அடைவதற்கான வழிவகை என்ன? அரசியல் வேலைத்திட்டம் என்ன? போராட்ட முறைகள் என்ன? என்பது பற்றி யாரும் திட்டவட்டமான எழுத்து மூல கொள்கை பிரகடனம் எதனையும் முன் வைக்கவில்லை.
எனவே இந்தப் பின்னணியில் இத்தமிழ் அரசியல் கட்சிகளின் கடந்த கால அரசியல் வரலாற்றை மீளாய்வு செய்வதும், அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதும், கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து புதிய வழிவகைகளை தேடுவதும் தமிழ் அரசறிவியல் பரப்பிற்கு அவசரமும் அவசியமானதுமாகும்.
இலங்கைத் தமிழர் அரசியலில் முதன் முதலாக1944ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டது. அதன் நிறுவுனரும் தலைவருமான ஜி .ஜி. பொன்னம்பலம் ஒற்றை ஆட்சியையே வலியுறுத்தினார்.
அந்த ஒற்றை ஆட்சியின் கீழ் இலங்கை தமிழர்களுக்கு தீர்வாக நாடாளுமன்றத்தில் 50 க்கு 50 என்ற தீர்வு திட்டத்தை முன்வைத்து அது பற்றி தொடர்ந்து 14 மணித்தியாலங்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசி “மரதன் பேச்சாளர்“என்ற பட்டத்தை பெற்றதைத் தவிர தீர்வு நோக்கி ஒரு அணுவளவும் நகர முடியவில்லை.
ஜி.ஜி பொன்னம்பலத்தின் தலைமை தமிழ் மக்களுக்கு சரியான தீர்வை பெற்றுத்தர முடியாது என்றும், தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார் என்றும் கூறிக்கொண்டு சமஸ்டி தீர்வை முன்வைத்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 1949ல் இலங்கை சமஸ்டி கட்சியை ஆரம்பித்தார்.
அந்தக் கட்சிதான் இன்று தமிழரசு கட்சி என்று அழைக்கப்படுகிறது. 1956ம் ஆண்டு தேர்தலில் அதிக ஆசனங்களை பெற்று தமிழ் மக்களின் தலைவனாக செல்வநாயகம் பொறுப்பெடுத்தார் அவர் நாடாளுமன்ற அரசியலூடாக “பண்டா-செல்வா ஒப்பந்தம்“மற்றும் “டட்லி-செல்வா ஒப்பந்தம்“ என்ற இரண்டு ஒப்பந்தங்களை சிங்கள தலைவருடன் செய்து ஏமாற்றப்பட்டார் என்று செல்கிறார்கள்.
தோல்வியின் ஒப்புதல் வாக்குமூலமாக கொள்ளப்பட வேண்டும்
சமஸ்டியில் ஆரம்பித்த செல்வா மாவட்ட சபை தீர்வுக்கு இணங்கி மாவட்ட சபையைக் கூட பெற முடியாமல் சிங்கள அரசியல் தலைவர்களிடம் தோற்றுப் போனார். 1956 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டு வரை தொடர்ந்த 20 ஆண்டுகள் தமிழ் மக்களின் ஏகத் தலைவனாக அரசியல் செய்த செல்வநாயகம் தொடர் தோல்விகளின் விரக்தியில் இனி தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லத்தான் முடிந்தது.
இதுவே அவரின் தோல்வியின் ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இன்னொரு வகையில் சொன்னால் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்வதற்கு ஒரு சட்ட மேதை, ஒரு அரசியல் தலைவன் தேவையென்று இல்லையே சாதாரண ஒரு பாமர மகனாலும் இவ்வாறு சொல்ல முடியுமே என்ற வாதப் பிரதிவாதங்களும் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.
செல்வநாயகத்தின் இறுதிக் காலத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரசையும், இலங்கை சமஸ்டிக் கட்சியையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டுக் கட்சி உருவாக்கப்பட்டு இக்கூட்ட அணியினால் தமிழ் மக்களுக்கு “தனிநாடே தீர்வு“என்கின்ற வட்டுகோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1976ல் செல்வநாயகம் இறக்க அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக வெளிப்பட்டார். 1976ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தினை 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைத்து போட்டியிட்டனர்.
அதில் தமிழ் மக்கள் 78 விகித வாக்குகளை தனி நாட்டு கோரிக்கைக்காக வாக்களித்து அன்று வழங்கக்கூடிய அதிகூடிய 18 ஆசனங்களை கூட்டணியினருக்கு வழங்கியிருந்தனர்.
பட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை நாடாளுமன்ற அரசியலினால் தமிழ் மக்கள் எதுவும் பெற முடியாது. எனவே நாடாளுமன்றத்துக்கு வெளியே தமிழீழத்திற்கான தமிழ் தேசிய மகாசபை அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் அதனைக் கைவிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை நாடாளுமன்றத்துக்குள் சென்று ஒற்றை ஆட்சியின் கீழ் சத்திய பிரமாணமும் செய்து கொண்டது. ஏனெனில் இந்த இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்திற்கான வழிவகை தெரியாமல் இருந்தது என்பது உண்மையானதாகும்.
நாடாளுமன்றத்தில் தமிழர்களின் ஆசனங்கள்
வழிவகை தெரியாமல் செயற்திட்டம் இன்றி பயணித்ததன் வெளிப்பாடு தான் மீண்டும் 77 ஆம் ஆண்டு தேர்தல் நாடாளுமன்றத்துக்குள் சென்று கடந்த கால சமஸ்டி,மாவட்ட சபை, தனிநாடு என்ற கொள்கைகளை கைவிட்டு அவற்றிலிருந்து மேலும் பல அடிகள் கீழிறங்கி 1982 ல் மாவட்ட அபிவிருத்தி சபை தீர்வுக்கு அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி ஜே. ஆர் ஜேவர்த்தன அரசாங்கத்துடன் இணக்க அரசியலுக்கு செல்ல நேர்ந்தது.
எனினும் 225 ஆசனங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்குள் தமிழ் மக்களின் 18 ஆசனங்களை கொண்ட கூட்டணியினரால் ஜனநாயக முறைப்படி ஏதாவது ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியுமா? அல்லது ஏதாவது ஒரு மசோதாவை சமர்ப்பித்து சட்டமாக்க முடியுமா? என்றால் இல்லவே இல்லை.
எனவே இலங்கை நாடாளுமன்றத்துக்குள் தமிழ் மக்களால் தமிழ் அரசியல் தலைமைகளினால் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகளால் எதனையும் சாதிக்க முடியாது என்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இதன்வெளிப்பாடுதான் ஆயுதப்போராட்டம் வீறுகொண்டெழுந்து சுமார் ஒரு கால்நூற்றாண்டு தமிழர் தாயகத்தில் ஒரு அரை அரசை கட்டமைப்புச் செய்து நிர்வகித்தும் காட்டப்பட்டது.
தமிழர் தாயகத்தில் கட்டப்பட்ட அரை அரசு 2009 மே முள்ளிவாய்க்காலில் வீழ்த்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் பேரவலம் தமிழ் மக்களுக்கு பேரழிவை தந்தது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வாறே முள்ளிக்வாய்க்கால் பேரவலம் கூடவே “இனப்படுகொலை“ என்ற ஒரு வரத்தையும் தமிழ் மக்களின் அரசியலுக்கு தந்தே சென்றிருக்கிறது.
அதாவது இனப்படுகொலையை முதலீடாக்கத் தெரியாத தமிழ்த் தலைமைகள் மீண்டும் கடந்த 14 ஆண்டுகளாக நாடளுமன்ற அரசியல் என்ற மாய மானை தமிழ் மக்களுக்கு காட்டத் தொடங்கிவிட்டனர்.
மூன்று கட்சிகளும் சமஸ்டியையே கோருகின்றனர்
இலங்கை நாடாளுமன்றத்துக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எதனையும் சாதிக்க முடியாது என்பது நன்கு தெரிந்து கொண்டும் தமிழ்த் தேசியம் பேசும் மூன்று அரசியல் கட்சிகளும் தமக்கு அதிகப்படியான நாடாளுமன்ற ஆசனங்களை தந்தால் தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது ?எவ்வளவு ஏமாற்றானது?
தற்போது இலங்கை அரசியலில் “விக்கிரமாதித்தன் மனம் தளராமல் தொடர்ந்து படிகளில் ஏறுவதும் வேதாளம் உயரக்கிளம்பி முருங்கை மரத்தில் ஏறியது போலவே “சிங்களத் தலைவர்களும் காலத்துக்கு காலம் தமிழ் அரசியல் தலைமைகளை அழைத்து உங்கள் தீர்வை முன்வையுங்கள் பேசுவோம் என்பதும், அதனை நாடாளுமன்றத்தில் பேசி தீர்வு காண்போம் என்று கூறுவதும் கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ந்து நிகழ்கிறது.
இப்போதும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் கட்சிகளை அழைத்து தீர்வு திட்டம் பற்றி பேசுவோம் என்கிறார். இந்த நிலையில் தமிழ் தேசியம் என்று பேசிக் கொண்டிருக்கின்ற மூன்று கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் சமஸ்டியையே கோருகின்றனர்.
இவர்கள் எல்லோரும் கூறுகின்ற, கோருகின்ற, முன்வைக்கின்ற சமஸ்டி தீர்வை அடைவதற்கான வழிவகை என்ன? அரசியல் வேலைத்திட்டம் என்ன? போராட்ட முறைகள் என்ன? என்பது பற்றிய திட்டவட்டமான எழுத்து மூல பூர்வாங்க திட்ட வரைவை முன் வைக்க வேண்டும்.
அதை விடுத்து சகட்டுமேனிக்கு சர்வதேச ஆதரவை திரட்டுவோம், சர்வதேசத்தை கேட்போம், ஐநாவிடம் முறையிடுவோம், ஐநா மூலம் தீர்வை பெறுவோம் என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு பேசுவது சுத்த ஏமாற்று.
இலங்கை நாடாளுமன்ற அரசியலுக்குள் இருந்து கொண்டு எதனை இவர்களால் செய்ய முடியுமோ அதனை பற்றி மட்டுமே இவர்கள் பேசவேண்டும். அல்லது நாடாளுமன்றத்துக்கு வெளியே எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெறப் போகிறோம் என்பதை யாராவது சொல்ல வேண்டும்.
இவர்கள் இனிக் களத்தில் எவ்வாறு போராடப் போகிறார்கள் என்பதை சாத்தியப்பாட்டுடன் அறிவுபூர்வமாக கூறவேண்டும். அகிம்சைப் பாதையாயின் அது எப்படி என்று களநிலையிற் போராடிக் காட்ட வேண்டும். அகிம்சையில் தியாகி திலீபனின் பாதையில் தொடர்ந்து செல்லத் தயாரா என்பதை நடைமுறையிற் செய்துகாட்ட யாராவது முற்படுவரா? அல்லது சாத்தியமான வேறுவழி என்ன இவர்கள் முன்வைக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கான எதிர்கால அரசியலை நிர்ணயம் செய்யவல்ல ஒரு கொள்கைச் செயற் திட்டத்தை தமிழ்த் தேசியம் பேசும் அல்லது சமஷ்டி கோரும் மேற்படி தலைமைகள் ஏமாற்று வித்தை காட்டாது தெளிவாகவும் அவசரமாகவும் முன்வைக்க வேண்டும்.