இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகம் பொய்யாக சித்தரிக்கப்படுவதாக உலமா கவலை
இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகமும் அதன் அமைப்புகளும் வேண்டுமென்றே பொய்யாக சித்தரிக்கப்படுவது குறித்து அகில இலங்கை ஜம்மியல்துல் உலமா கவலை வெளியிட்டுள்ளது. இது முஸ்லிம் சமூகத்தை சந்தேகத்துடன் பார்க்க வழிவகுக்கிறது.
அத்துடன் இதன் விளைவாக வகுப்புவாத நல்லிணக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு ஏற்படுகிறது என்றும் உலமா சபை குறிப்பிட்டுள்ளது.
பல்வேறு இன மற்றும் மத பின்னணிகளைக் கொண்ட ஒரு நாட்டில் வாழும் போது, இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தங்களது தனித்துவமான மத மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் மற்ற சமூகங்களுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நாட்டில் நடைமுறையில் உள்ள மஸ்ஜித்கள், அரபு மத்ரஸாக்கள், குர் ஆன் மத்ரஸாக்கள் - மக்தப், அஹதியா, முஸ்லீம் தனிநபர் சட்டங்கள், ஹலால் உணவு நுகர்வு போன்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் முஸ்லிம்களை இந்த நாட்டின் நல்ல குடிமக்களாக வாழ வசதி செய்துள்ளன.
இந்த அமைப்புகள் தேசிய பாதுகாப்புக்கு அல்லது நாட்டின் சமூக சகவாழ்வுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பதை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும் என்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பின்பற்றி முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை பரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து அரசியல்வாதிகளையும் ஏனையவர்களையும் அகில இலங்கை ஜம்மியத்துல உலமா கோரியிருக்கிறது.




