ஜனாதிபதியின் தீர்மானத்தை பாராட்டிய அமைச்சர்!
மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை தொடர்பில் முன்கூட்டிய தயார்நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
பதற்ற நிலை
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதன் காரணமாக நாடு வீழ்ச்சியடையும் வரை பார்த்துக்கொண்டிருக்க தேவையில்லை. ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையால்தான் இலங்கை இன்னொரு வெனிசுலாவாக மாறாமல் பொருளாதார ரீதியில் ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர முடிந்தது.
ஒரு நாடு என்ற வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பாக சர்வதேச அளவில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால் கடன் மறுசீரமைப்பு பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய வெளிநாடுகளின் ஆதரவைப் பெற முடிந்தது. அது நமது வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த பாரிய வெற்றி என்றே கூற வேண்டும்.
கடினமான சூழ்நிலை
வெளிவிவகார கொள்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ள அந்த அறிவைப் பயன்படுத்தி வெளிநாடுகளை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து எம்மால் முன்னேற முடிந்தது.
ஒரு நாடாக நாம் மிகவும் கடினமான சூழ்நிலையிலிருந்து ஓரளவு ஸ்திரத்தன்மைக்கு வந்துள்ளோம். ஆனால் இது இன்னும் முழுமை பெறவில்லை. ஒரு சிறிய அசைவு உங்களை மீண்டும் படுகுழியில் விழச் செய்யும்.
எதிர்க்கட்சிகள் நாட்டை வீழ்த்தி மீண்டும் நரகத்தில் தள்ள விரும்புகிறார்களா? அல்லது நரகத்தில் இருந்து பாதுகாத்து மீட்டெடுப்பதா? என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
எனவே கட்சி அரசியலை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது அனைவரினதும் பொறுப்பாகும்” என்று தெரிவித்துள்ளார்.