தாமரை கோபுரத்தின் பின்னணியில் மறைத்திருக்கும் கதை-சம்பிக்க ரணவக்க
தாமரை கோபுரத்தை நிர்மாணிக்க பெற்ற கடனை செலுத்த வேண்டுமாயின் தினமும் அந்த கோபுரத்தின் மூலம் 41 ஆயிரம் டொலர்கள் அதாவது ஒரு கோடியே 50 லட்சம் ரூபாவை சம்பாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்னபுர கோட்டே பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
30 லட்சம் ரூபா கிடைத்தது என்று மகிழ்ச்சியடைய முடியாது
தாமரை கோபுரத்தின் மூலம் 30 லட்சம் ரூபா வருமானம் கிடைத்தது என்று மகிழ்ச்சியடைய முடியாது. கடனை அடைக்க அதனை விட பல லட்சம் ரூபாவை சம்பாதிக்க வேண்டும் என்பதே உண்மையான நிலவரம். தாமரை கோபுரத்தை நிர்மாணிக்க 10 கோடியே 40 லட்சம் அமெரிக்க டொலர் செலவாகியுள்ளது.
அதனை நிர்மாணிக்க பெற்ற கடனுக்கான வட்டி, காப்புறுதி கட்டணம் மற்றும் ஏனைய செலவுகளை கூட்டும் போது மேலும் 5 கோடியே 60 லட்சம் டொலர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் செலுத்த வேண்டும்.
அழகாக தெரியும் அபிவிருத்தித்திட்டங்களின் பின்னணியில் மோசமான கதை உள்ளது
வருவாய் ஈட்டும் நாடாக இருந்தால், இப்படியானவற்றுக்கு செலவிடுவதில் பிரச்சினையில்லை. வங்குரோத்து அடைந்துள்ள நாட்டுக்கு இவை பெருத்தமானதல்ல. அழகாக தெரியும் இப்படியான அபிவிருத்தித்திட்டங்களின் பின்னணியில் மிக மோசமான கதை இருக்கின்றது.
இலங்கைக்கு உரிமையாகி இருக்கும் வங்குரோத்து நிலைமை அந்த கதைக்குள் ஒழிந்திருக்கின்றது எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.