கனடாவில் நியூசிலாந்து நாட்டு தம்பதியினருக்கு ஏற்பட்ட நிலை
கனடாவின் ரொறன்ரோவில் அமைந்துள்ள Airbnb விடுதியில் தங்கியிருந்த நியூசிலாந்து தம்பதியை நள்ளிரவில் பொலிஸார் வெளியேற்றிய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த Airbnb விடுதிக்கான கட்டணமாக 4,500 டொலர் செலுத்தியிருந்தும், நள்ளிரவில் அந்த தம்பதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்தை சேர்ந்த சையதா பர்ஹானா ஷெரீப் மற்றும் ஷெரீப் மசூதுல் ஹக் தம்பதி ரொறன்ரோவில் உள்ள குறித்த Airbnb குடியிருப்பை ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர்.
இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் திடீரென்று அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பின் கதவை தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்துள்ளனர். அறிமுகம் இல்லாத ஒருவர் இவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதில் செய்வதறியாது திகைத்துப் போன அந்த தம்பதி அந்த நபரிடம் விளக்கம் கேட்டுள்ளது. ஆனால் அந்த குடியிருப்புக்கு உரிமையாளர் தாம் எனவும், அதனால் யார் தங்க வேண்டும் என முடிவு செய்வது தமது உரிமை எனவும் கூறியுள்ளார்.
மொத்த கட்டணமும் செலுத்தப்பட்டு, ஆகஸ்டு 2ம் திகதி வரையில் தங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளதாக கூறியும் அந்த நபர் ஏற்க மற்றுத்துள்ளார். இதனிடையே, நியூசிலாந்து தம்பதி வெளியேற மறுப்பு தெரிவிக்கவே, அந்த நபர் பொலிசாரை உதவிக்கு அழைத்துள்ளார்.
பொலிசாரும், அந்த நபர் கூறிய விளக்கம் தங்களுக்கு ஏற்புடையதாக இருப்பதாக கூறி, 30 நிமிடங்களில் வெளியேற வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர்.
வேறுவழியின்றி அந்த நியூசிலாந்து தம்பதி குறித்த இல்லத்தில் இருந்து வெளியேறி, 580 டொலர் கட்டணத்தில் இன்னொரு விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனிடையே சுமார் 2 மணி நேரம் தொடர்ச்சியாக முயன்று, Airbnb நிர்வாகி ஒருவரிடம் நடந்தவற்றை விளக்கியுள்ளனர்.
இந்த நிலையில், விசாரணைக்கு பின்னர் வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் Airbnb நிர்வாகம் அந்த தம்பதியின் மொத்த கட்டணத்தையும் திருப்பி செலுத்தியுள்ளதுடன், மன்னிப்பும் கோரியுள்ளது.