கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டியிருக்கும்! பிரித்தானிய பிரதமர் கடும் எச்சரிக்கை
கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் "முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை" என்று உணர்ந்தால், "இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டியிருக்கும்" என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய முடக்கலின் இரண்டாவது வாரம் தொடங்கியவுடன், பிரதமர் கொரோனா நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் பொருட்டு கட்டுப்பாடுகளை கடுமையாக்க அழைப்பு விடுத்தார்.
பல்பொருள் அங்காடிகளில் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிவதை அதிக அளவில் செயல்படுத்துவது எப்படி என்பதை அமைச்சர்கள் ஏற்கனவே கருத்தில் கொண்டுள்ளனர்.
"நாங்கள் விதிகளை தொடர்ந்து பரிசீலிக்கப் போகிறோம், அவற்றை இறுக்கப்படுத்த வேண்டும். அதனை நாங்கள் செய்வோம்.
"எங்களிடம் ஏற்கனவே விதிகள் உள்ளன, அவை முறையாகப் பின்பற்றப்பட்டால் மிகப்பெரிய, பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.
"மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் நோயைப் பரப்புவது பற்றி சிந்திக்க வேண்டும். "உங்களிடம் உள்ள ஒரு தொடர்பு இந்த நோயைப் பரப்பும் சங்கிலியாக இருக்கலாம்."
"இப்போது அதிகபட்ச விழிப்புணர்வு, அதிகபட்ச விதிகளை கடைபிடிப்பதற்கான தருணம்" என்று பிரதமர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
"நிச்சயமாக, விடயங்கள் சரியாக கவனிக்கப்படவில்லை என்று நாங்கள் உணர்ந்தால், நாங்கள் இன்னும் அதிகமாக செய்ய வேண்டியிருக்கும்," என பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 46,169 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 529 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இதன்படி, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 81,960 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,118,518 ஆக உயர்ந்துள்ளது.