நாடளாவிய ரீதியில் பெட்ரோலுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்..!(photos)
நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை பரவலாக அவதானிக்க முடிகின்றது.
நெல்லியடி
நெல்லியடி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தினுடைய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மூன்று நான்கு நாட்களாக காத்திருந்தவர்களுக்கும் அன்று டீசல் விநியோகம் இடம்பெற்றது.
அதேவேளை வெதுப்பகங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் நிறுவனங்கள் என்பவற்றிற்கும் டீசல் கொள்கலன்களில் வழங்கப்பட்டிருந்தன.
அங்கு பிரதேச செயலாளர் வழங்கப்பட்ட அட்டை நடைமுறைக்கு அமைவாகவே டீசல் விநியோகம் இடம்பெற்றது.
இதேவேளை நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம்வரை காத்திருந்த மக்களுக்கும் இன்றையதினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை
அம்பாறை - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகிக்காமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன், வீதி மறியல் போராட்டமொன்றும் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர், பொலிஸார் வரவழைக்கப்பட்டு மக்களை கலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் பெட்ரோல்,டீசலினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் இன்று பகல் முழுவதும் காத்திருந்துள்ள நிலையில் பெட்ரோல் கிடைக்காத நிலையில் திரும்பி சென்றுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, மாஞ்சோலை பகுதியில் உள்ள எரிபொருள்
நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் பெட்ரோல் வாகன பாவனையாளர்கள் பகல்
முழுவதும் காத்திருந்த நிலையில், மாலை 6.30 மணியளவாகியும் பெட்ரோல் இல்லாத
நிலையில் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய திரும்பி சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம்
யாழ்.மாவட்டத்தில் ஒரு பகுதி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே நேற்றைய
தினம் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
நீண்ட வரிசையில் பொதுமக்கள்
இந் நிலையில், எரிபொருள் பெறுவதற்காக பொதுமக்கள் நள்ளிரவை தாண்டியும் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று காலை தொடக்கம் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுவந்தபோதும் 1000
ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றது.
அதனையும் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தே பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் ஆர்ப்பாட்டம்
இதேவேளை பருத்தித்துறை கிராமக்கோடு எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக கடமை நேரம் நிறைவடைந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தை மூட ஆயத்தமானபோதும் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகிக்க வேண்டும் என்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் பொலிஸாரால் சமரசம் செய்யப்பட்டு தொடர்ந்தும் சிலமணி நேரம் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் எரிபொருளினைப் பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகள், வாகனங்களை கொண்டு அன்றாட தொழிலில் ஈடுபடும் சாரதிகள் தங்களது வாகனத்திற்கான எரிபொருளினை பெற்றுக் கொள்வதற்கு நாளாந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகின்றது.
ஓட்டமாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காத்திருந்து தங்களுக்கு தேவையான எரிபொருட்களை பெற்றுக் கொள்வதனை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி: நவோஜ்
திருகோணமலை
திருகோணமலையில் மக்கள் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள நீண்ட நேர வரிசைகளில் நிற்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணெய், டீசல் தட்டுப்பாட்டால் கடற்றொழிலார்கள் கடலுக்கு செல்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
திருகோணமலை - திருக்கடலூர்,புல்மோட்டை,நிலாவெளி மற்றும் ஜமாலியா போன்ற பிரதேசங்களில் உள்ள மீனவர்களின் படகுகள்,வள்ளங்கள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு நீண்ட வரிசைகளில் எரிபொருளுக்காக காத்திருந்தாலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிரமமாக உள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் மீனவர்களின் கடற்றொழில் வாழ்வாதாரமம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீனவர்களுக்கு எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக மீன்பிடி திணைக்களம் இலகுவான வழிமுறைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
செய்தி: எப்.முபாரக்