கோவிட் மரணங்களுக்கு ஜனாதிபதியே பொறுப்பு - அனுரகுமார திஸாநாயக்க
கோவிட் தொற்றால் ஏற்படும் அனைத்து மரணங்கள் மற்றும் அனைத்து கண்ணீருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொறுப்புக் கூற வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கோவிட் பரவும் நிலைமையில் கட்டாயம் கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சுகாதார செயலணிக்குழு மறுசீரமைக்கப்பட வேண்டும்.
இந்த விடயம் சம்பந்தமாக ஏற்கனவே பணிகளை முன்னெடுத்து வந்த மருத்துவர் அனில் ஜாசிங்க, பபா பலிஹவடன, ஜயருவன் பண்டார் போன்றவர்கள் இந்த குழுவில் இணைக்கப்பட வேண்டும்.
தற்போது நாட்டின் கோவிட் வைரஸ் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தனி அரசியல் அதிகாரத்திடம் சிக்கியுள்ளது.
கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எதிர்க்கட்சிகளின் உதவியைப் பெற முடியாது என்றால், குறைந்தது அரசாங்கத்திற்குள் இருக்கும் அரசியல் தலைவர்கள் அடங்கிய கூட்டான அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
