இலங்கையில் மே மாதம் வரை மின் வெட்டு நீடிக்கும்
நாட்டில் நீர் மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதியளவு மழை பெய்து நீர்த்தேக்கங்கள் நிரம்பும் வரையில் மின்விநியோக தடை நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு மின் விநியோக துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டாலும், நேரம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேவேளை, தற்போது மின் உற்பத்தித் தேக்கங்களில் உள்ள நீர் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே மின் உற்பத்திக்கு போதுமானதாக இருக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நாட்டுக்குத் தெரிவித்தார்.
மே மாதத்தின் பின்னர் தென்மேற்கு பருவகால மழை கண்டி மின் தேக்கங்களை நிரப்ப போதுமானதாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னதாக அந்த பகுதிகளில் சிறிது மழை பெய்தாலும் அதிக மின்சாரம் உற்பத்தி செய்ய போதுமானதாக இல்லை. கடந்த செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் பெய்த மழைக்காலத்தில், நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 70% நீர் மின் நிலையங்களிலும், 28% அனல் மின் நிலையங்களிலும், 2% காற்றாலை மின் நிலையங்களிலும் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆனால், வறட்சியின் காரணமாக நீர்மின் உற்பத்தி 20% ஆகவும், அனல் மின் நிலையங்கள் 78% ஆகவும், காற்றாலைகள் 2% ஆகவும் குறைவடைந்துள்ளது.
எவ்வாறாயினும், தேவையான அளவு எரிபொருள் கிடைத்தால் மாத்திரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படாதென என மின்சாரத்தை துண்டிக்கும் சட்ட அதிகாரம் கொண்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



