லண்டனில் இலங்கை தமிழ் சிறுவனுக்கு ஏற்பட்ட அவல நிலை - கடும் அதிருப்தியில் குடும்பத்தினர்
லண்டன் கால்பந்து போட்டியின் போது 12 வயதுடைய சிறுவன் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என த காடியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
12 வயதுடைய குறித்த கால்பந்து வீரரை அவரது உள்ளூர் கால்பந்து சங்கம் ஆதரவளிக்காமைக்காக சிறுவனின் குடும்பத்தினர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்னர்.
மேலும் இந்த இனரீதியான துஷ்பிரயோகத்திற்கு சம்பந்தப்பட்ட எதிர் அணியினரால் மன்னிப்பு கேட்கப்படவில்லை என குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேற்கு லண்டனில் உள்ள பிட்ஷாங்கர் எப்சி அணிக்காக ஒன்பது பேர் கொண்ட ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சதி பாலகுரு எனப்படும் இலங்கை பூர்வீகம் கொண்ட சிறுவன், பெனால்டி அடிக்க முயற்சித்த போது எதிரணியினரால் இனரீதியாக துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அவரை இந்தியர் என கூறி மைதானத்தில் பலரும் அவமதித்துள்ளனர். எனினும் சதி பிரித்தானிய மற்றும் இலங்கை பூர்வீகத்தை கொண்டவர் ஆகும். இந்த சம்பவத்தினால் 16 மாதங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தனது உரிமைக்காகவும் அவர் குரல் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்.
இவ்வாறான விடயங்கள் தனது விளையாட்டினை மட்டுப்படுத்திவிட கூடாதென சதி குறிப்பிட்டுள்ளார்.
ஆடுகளத்தில் ஆசியப் பின்னணியில் இருந்து வந்த ஒரே வீரர் சதி என்பவராகும். ஆசியப் பின்னணியைக் கொண்டிருந்து கால்பந்து வீரராக இருப்பதில் தனது வாய்ப்புகள் ஏற்கனவே 50 சதவீதம் குறைத்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் அவரை தனிமைப்படுத்தியது. விளையாட்டை விட்டு செல்லும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. "நான் இதற்கு முன்பு இவ்வாறான ஒரு நிலைமையை அனுபவித்ததில்லை. எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை, நான் முடங்கிப்போய் வருத்தப்பட்டேன்” இன்னமும் எனக்கு ஆதரவாக எனது அணியே இல்லை. என்னிடம் ஒருவரும் மன்னிப்பு கேட்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எனது விளையாட்டுகள் தொடரும். நான் எனது கவனத்தை போட்டியில் செலுத்துவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.