யாழ்ப்பாண மக்கள் சிறந்தவர்கள்: நன்றி தெரிவித்த பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது யாழ்ப்பாண மக்கள் சிறந்தவர்கள். பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் யாழ்ப்பாண மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உயித் என் பி லியனகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் என்ற வகையில் ஊடகங்களின் ஊடாக யாழ்ப்பாண மக்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களோடு ஒப்பிடும்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சகல மக்களும் எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களிலோ, எதிர்ப்பு நடவடிக்கையிலோ ஈடுபடாமை மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் எவருக்கும் இடையூறு விளைவிக்காத வகையில், பொலிஸ் அதிகாரிகளுடன் முரண்படாமல் தமது அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதற்குப் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்குகின்றார்கள். எனவே பொலிஸ் திணைக்களம் என்ற ரீதியில் யாழ்ப்பாண மக்களுக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற மூவினங்களைச் சேர்ந்த மக்களுக்கும் மிகுந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் தற்போது க.பொ.த சாதாரண பரீட்சை இன்று ஆரம்பித்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நாம் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
பரீட்சைக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தற்பொழுது பரீட்சைக்காலம் என்பதனால் யாழில் உள்ள ஆலயங்களில் இடம்பெறும் திருவிழாக்களின் போது ஒலிபெருக்கி சத்தத்தினை மிகவும் குறைத்துப் போடுவதன் மூலம் மாணவர்களின் கல்வியில் பாதிப்பினை ஏற்படுத்துதை தவிர்க்கலாம்.
பரீட்சையில் சிறந்த சித்தி அடைவதற்கு எம்மால் ஆன முயற்சிகளை நாங்கள் முன்னெடுக்க வேண்டும். அதற்குரிய முழு நடவடிக்கையினையும் பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களில் தற்போதைய பரீட்சை காலங்களில் ஒலி பெருக்கி பாவனைக்குத் தடைவிதித்திருக்கின்றோம்.
நிபந்தனைகளுடன் மாத்திரமே சகலருக்கும் ஒலிபெருக்கி அனுமதியினை வழங்குகின்றோம். எனவே மாவட்டத்தில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் சிறப்பாகப் படித்து எழுவதற்கு அனைத்து மக்களின் ஒத்துழைப்பினையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
யாழ்.மாவட்டத்தில் குற்றச்செயல்கள் சில இடங்களில் இடம்பெற்றுள்ளன. அவ்வாறான இடங்களில் இடம்பெறும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை பொலிஸார் உரிய தரப்பினருடன் உதவியுடன் கைது செய்திருக்கிறார்கள்.
ஏனென்றால் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் விரைவாக பொலிஸாரால் கைது செய்யப்படுகிறார்கள்.
எனினும் சில சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
எனவே யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த
பொதுமக்களின் ஒத்துழைப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றால், புதிய சம்பவங்களுடன்
தொடர்புடையவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.



