அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹட்டன் மக்கள் (Photos)
அரசாங்கத்திற்கு எதிராக சாலையை மறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (21) ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், கேகாலை றம்புக்கனை பகுதியில் உயிரிழந்த நபருக்கு நீதி வேண்டியும், ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டியும் பொதுமக்கள் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியை வழிமறித்த போராட்டக்காரர்கள் வீதிகளில் அமர்ந்தும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது பொது மக்கள் வீதியை
வழிமறித்ததன் காரணமாக ஹட்டன் பொகவந்தலாவ, ஹட்டன் மஸ்கெலியா, ஹட்டன் போடைஸ்
வழியான போக்குவரத்து, ஹட்டன் சாமிமலை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து
முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது.
டிக்கோயா தோட்டம், டிக்கோயா வனராஜா, அட்டன் பன்மூர், டிக்கோயாவை சூழவுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
மக்களை வதைக்கும் இந்த அரசு வீடு செல்ல வேண்டும், ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் ஒருமித்த குரலில் கோஷங்களை எழுப்பினர். டிக்கோயா நகரிலுள்ள பல வர்த்தகர்கள் கடைகளை மூடி தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.














