250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்ற இலங்கையர்! நாடாளுமன்றில் பகிரங்கமாக அறிவிப்பு
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் வழக்கு தாக்கல் நடவடிக்கைளை தடுப்பதற்காக சாமர குணசேகர என்பவருக்கு 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் சாட்சியம் கிடைக்கவில்லை என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25.04.2023) எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,“தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஏதாவதொரு வழிமுறையில் தோல்வியடைந்தால் அதன் பொறுப்பை சுற்றாடல் துறை தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு ஏற்க வேண்டும்.இல்லாத அதிகாரத்தை இவர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளார்கள்.
250 மில்லியன் ரூபா இலஞ்சம்
நட்ட ஈடு பெற்றுக்கொள்வதற்கு வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் குறித்த கப்பல் தரப்பினரால் இலங்கையர் ஒருவருக்கு 250 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது,ஆனால் அதற்கு சாட்சியம் கிடைக்கவில்லை.
இந்த விடயம் தொடர்பில் எனக்கு எதிராக அரசியல் மட்டத்தில் சவால் விடுக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் நபர் தொடர்பில் குறிப்பிடுவதற்கு அச்சமடைய போவதில்லை.
சாமர குணசேகர என்பவர் இலஞ்சம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளேன்.உண்மையை அவர்களே கண்டுப்பிடிக்க வேண்டும்.
2021 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாகிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் வளங்களுக்கும்,கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வது தொடர்பில் கடல் வளங்கள் அபிவிருத்தி அதிகாரசபை 40 துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு ஒன்றை நியமித்தது.
துறைசார் நிபுணர்கள் நட்டஈடு தொடர்பில் இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு மாதிரிகளுக்கு அமைய கப்பல் விபத்தினால் ஏற்பட்ட விளைவுகளுக்கு 6.4 பில்லியன் டொலர் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் இடைக்கால பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு சிங்கப்பூர் நாட்டு வணிக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
உணர்வுபூர்வமான விடயங்களை பகிரங்கப்படுத்த முடியாது
நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் ஏனைய உணர்வுபூர்வமான விடயங்களை பகிரங்கப்படுத்த முடியாது.
நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒரு விடயத்தை நாடாளுமன்ற விவாதத்துக்கு உட்படுத்த கூடாது என நாடாளுமன்ற நிலையியற்கட்டளையின் 33 மற்றும் 36 ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்.பி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் சுற்றாடல்துறை தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள்,சட்டத்தரணிகள் மற்றும் மீனவ சமூக பிரதிநிதிகள் ஆகியோரை மேற்பார்வை குழுவுக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டமைக்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொள்கிறேன்.
வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்ட ஒரு விடயத்தை நாடாளுமன்ற தெரிவு குழுவில் விசாரணைக்கு உட்படுத்த முடியாது.”என தெரிவித்துள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)