வடக்கில் சீனித்தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம்: பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை!
வடக்கில் அமைக்கப்படும் சீனித் தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் பொ.ஐங்கரநேசன் இன்று (07.07.2023) நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
மக்களுக்கு வேலை வாய்ப்பு
அத்தோடு, தொழிற்சாலையின் அமைவிடத்துக்கெனவும் கரும்புத்தோட்டங்களை அமைப்பதற்கெனவும் முதற்கட்டமாக 74,100 ஏக்கர்கள் அளவு காணியை விடுவிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.
இத்திட்டத்தை முன்னெடுத்துள்ள தரப்பு, இது போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கென வரப்பிரசாதம் என்று இனிப்பாய்ச் சிலாகித்து வருகிறது.
நீர் அடிச்சுவடு
ஆனால், இதன் உண்மைகள் மிகவும் கசப்பானவை. அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்கும்போது திட்டத்தின் பொருத்தப்பாட்டை அறிந்துகொள்ள நீர் அடிச்சுவடு (water foot print) என்ற நீர்த் தேவையே சூழலியற் குறிகாட்டியாக முதலில் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
கரும்பினதும் சீனியினதும் நீர்அடிச்சுவடு மிகவும் உயர்வானது. ஒரு கிலோ கரும்பை உற்பத்தி செய்வதற்கு 210 லீற்றர் தண்ணீரும் ஒரு கிலோ சுத்திகரிக்கப்பட்ட சீனியை உற்பத்தி செய்வற்கு 1780 லீற்றர் தண்ணீரும் தேவைப்படுகிறது.
கரும்பு வருடம் முழுவதும் நீர் பாய்ச்ச வேண்டிய ஒரு பல்லாண்டுப் பயிருமாகும் இவற்றின் அடிப்படையில் பேராறுகள் எதுவுமே இல்லாத வறண்ட வலயமான வடக்கில் பெருமளவு நீரை விழுங்கும் சீனி உற்பத்தியை முன்னெடுப்பது பேராபத்தாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |