நடந்த அகிம்சை போராட்டங்களும் நடக்க வேண்டியவையும்!
ஈழத்தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் பல கட்டங்களை கடந்து வந்திருக்கின்றது. வெகுஜன அகிம்சைப் போராட்டத்தில் கதவடைப்பு, நிர்வாக முடக்கல், சட்ட மறுப்பு, சாகும் வரை உண்ணாவிரதம், அடையாளம் உண்ணாவிரதம், தொடர் உண்ணாவிரதம் என பல போராட்ட வழிமுறைகளை கண்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னான கடந்த 14 ஆண்டுகளில் எழுக தமிழ், பொத்துவில் இருந்து பொலிகண்டி வரை, வடக்கிலிருந்து கிழக்கிற்கு என வெகுஜன போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அதை தாண்டி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம், காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டம், புத்த விகாரை கட்டுவதற்கு எதிரான போராட்டம், சிலை உடைப்புக்கு எதிரான போராட்டம் என தொடர்ந்து குறுகி இப்போது விகாரை கட்டுவதற்கு எதிராக சட்டத்தரணிகள் பொலிஸாருடன் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் வீரதீரக் கர்ச்சனைகள், குளறுகைகள் என வெகுசன போராட்டங்கள் உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாகிப் போய்விட்டன.
உரிமைக்கான போராட்டம்
இறந்தகால படிப்பினையை தெரிந்து நிகழ்காலத்தை சரியாக நிர்வகித்து எதிர்காலத்தை திட்டமிட்டு நிர்ணயம் செய்யாமல் வெற்றுக் கோஷங்களுடன் கூச்சலிடுவதால் மட்டும் ஈழத் தமிழினத்தை பாதுகாத்திட முடியாது.
இந்நிலையில் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் உரிமைக்காக நடாத்தப்பட்ட அகிம்சை போராட்டங்களும் இனி நடக்க வேண்டியவை பற்றியும் ஒரு மதிப்பீடு செய்வது அவசியமாகிறது.
இலங்கை தீவில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான முதலாம் கட்ட அரசியல் முன்னெடுப்புக்கள் குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஆண்டுகளிலிருந்து 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டம் வரும் வரையான காலத்தில் நிகழ்ந்தது.
சேர்.பொன் இராமநாதன், அருணாசலம், சகோதரர்களால் முன்னெடுக்கப்பட்டது. தமிழர்களின் அரசியலை "கனவான் அரசியல்" என அழைக்கலாம். இந்த கனவான் அரசியலினால் இவர்களுக்கு வெள்ளைக்கார எஜமான்கள் கொடுத்த சேர் பட்டம் மட்டுமே மிஞ்சியதே தவிர அரசியலில் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.மாறாக சேர். பொன். அருணாசலம் இலங்கை தேசிய காங்கிரஸை 1919 ஆம் ஆண்டு இலங்கையர் அனைவருக்குமாக சிங்களத் தலைவர்களுடன் இணைந்து உருவாக்கினார்.
அதில் சிங்களத் தலைவர்கள் தமிழர் உரிமைகளைப் புறக்கணித்து எதிர் நிலைப்பாடு எடுத்த நிலையில் அதிலிருந்து வெளியேறி அருணாசலம் 1921 ஆம் ஆண்டு தமிழர் மகாசபை என்பவற்றை உருவாக்கினார்.
சேர் .பொன். இராமநாதன் 1915 கம்பளைக் கலவரத்தின் போது சிங்களவர்களுக்காக ஆங்கில அரசுடன் வாதாடி சிங்களத் தலைவர்களை பாதுகாத்து முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தார் என்ற முஸ்லிம் மக்களின் குற்றச்சாட்டும் மிஞ்சிக் கிடக்கிறது. ஆனால் 1912 இல் சிங்களவர்களால் சட்ட நிர்ணய சபைக்கு தெரிவு செய்யப்பட்ட இராமநாதனால் கூட சிங்கள தலைவர்களை திருப்திப்படுத்த முடியவில்லை.
அவ்வாறே 1919இல் இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராக சிங்களத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அருணாச்சலம் சிங்கள தலைவர்களால் முதுகில் குத்தப்பட்டு தோல்வி அடைந்தார்.இதனால் தேசிய காங்கிரஸில் இருந்து வெளியேறி தமிழர் மகாசபையை அமைக்க நேரிட்டது.
சிங்கள தலைவர்களின் பயன்
இந்த அண்ணன் ,தம்பி கனவான் அரசியல் தோல்வியானது சிங்கள தலைவர்களுடன் இணைந்து எதனையும் தமிழ் மக்கள் பெற முடியாது என்ற உண்மையையும், தமிழ் மக்கள் தனியாக அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டும் ஆரம்ப புள்ளியாக கொள்ள முடியும்.
இதன் தொடர்ச்சியாக வந்த யாழ்ப்பாணத் வாலிபர் காங்கிரஸ் தமிழர் பிரச்சினையைப் பேசிய போதிலும் அது இலங்கை தேசியத்தை மையப்படுத்தியும், முன்னிலைப்படுத்தியும், குடியேற்றவாத எதிர்ப்பு போராட்டத்தையே முதன்மைப்படுத்தி செயல்பட்டது.
இதிலிருந்தவர்கள் பங்குபற்றிய மகேந்திரா ஒப்பந்தமும் சிங்களத் தலைவர்களால் கிழித்தறியப்பட்டு இவர்களும் கனவான் அரசியல் பேசி தோல்வி அடைந்தார்கள் என்பதையும் கவனிக்க தவறக்கூடாது.
டொனமூர் அரசியல் யாப்பின் பின்னர் தோன்றிய இரண்டாம் கட்ட அரசியல் முன்னெடுப்பை ""வாதப் பிரதிவாத அரசியல்"" என அழைக்கலாம்.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியை 1944 ஆண்டு உருவாக்கிய ஜி . ஜி.பொன்னம்பலம் வாதப் பிரதிவாத அரசியலை தலைமை தாங்கி முன்னெடுத்தார். இவர் ஒற்றை ஆட்சியை கொள்கையாகக் கொண்டு அதன் அடிப்படையில் ஒற்றை ஆட்சிக்குள் தமிழர் மற்றும் சிறுபான்மையினருக்கு 50 க்கு 50 உரிமை வேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
இக்கோரிக்கைக்காக 14 மணித்தியாலங்கள் பேசி கண்ட பலன் ஏதுமில்லை. பின்னாளில் 50 க்கு 50 கோரிக்கை காணாமல் போய்விட்டது. சிங்களத் தலைவர்களுடன் சமரசம் பேசி இணக்க அரசியலைத் தொடர்ந்து முன்னெடுத்து அமைச்சுப் பதவியைப் ஜி.ஜி சுவீகரித்ததன் விளைவு மலையகத் தமிழர் குடியுரிமை இழந்ததையும், அம்பாறை பட்டிப்பழை ஆற்றுப் பள்ளத்தாக்கை (இன்றைய கல்லோயா) தமிழர் தேசம் இழந்ததையுமே.
அது மட்டுமல்ல. தமிழர் பக்கம் முதலாவதாக தொடங்கப்பட்ட தமிழ் அரசிய கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இரண்டாக உடைந்து தமிழரசு கட்சியை தோற்றம் பெறவும் செய்தது. அத்தோடு சிங்களத்தின் இரண்டு தேசியக் கட்சிகளும் தனிச் சிங்கள சட்டம் என்ற தீர்மானத்தை எடுக்க வைத்த காலமாகவும் அமைந்தது.
இந்தக் காலகட்டத்தில் ஜிஜி னுடைய அரசியல் முன்னெடுப்பானது ஒற்றை ஆட்சி தத்துவம் வலுவடையவும் சிங்களத்துக்கு சேவகம் செய்வதாகவும் அமைந்துவிட்டது.இவரது வாதப்பிரதிவாத அரசியல் முன்னெடுப்பு தோல்வி அடைந்தது மட்டுமல்ல எதிர்மறையாக தமிழ் மக்களின் அழிவின் தொடக்கமாகவும் அமைந்தது. இதன்பின் ஜி. ஜி. யின் தலைமைத்துவம் 1956ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது. மூன்றாவது கட்ட அரசியலை எஸ். ஜே. வி. செல்வநாயகம் தொடக்கி வைத்தார்.
அவர் ""நேரடி போராட்ட அரசியலை"" கொள்கையாக முன்வைத்து காலிமுகத்திடலில் சத்யாக்கிரகப் போராட்டத்தை நடத்தினார். இப்போராட்டத்தை அரசு சிங்களக்காடையர்களைக் கொண்டு அடித்து உதைத்து விரட்டியது.
இதன் பின்னரும் தமிழரசுக்கட்சி சற்றும் தளரந்து இருந்தாலும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், திருமலை யாத்திரை, கதவடைப்பு, சட்ட மறுப்பு, ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம், அமைச்சர்களுக்கு கறுப்பு கொடி காட்டுவது, சுதந்திர தினத்தன்று கறுப்புக்கொடி ஏற்றுவது போன்றவற்றை முன்னெடுத்தனர்.
வெகுஜன போராட்டம்
தமிழரசு கட்சி இறுதியாக செய்த பெரிய ஒரு வெகுஜன போராட்டம் என்றால் அது 1961ம் ஆண்டு 61 நாட்கள் தொடர்ந்து நடத்திய சத்யா கிரக போராட்டம்தான். அதற்குப் பின்னர் அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த ஒரு வெகுஜன போராட்டத்தையும் நடத்தவில்லை.
இங்கு ஏன் அகிம்சை போராட்டம் தோல்வியில் முடிந்தது என்பதற்கு ஈழத் தமிழர்கள் பதில் தேட வேண்டும். 1961ம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு கிழக்குத் தழுவிய முழு அளவிலான அகிம்சை போராட்டம் எதிலும் யாரும் ஈடுபடவில்லை.
அத்தோடு தமிழ்த் தலைவர்கள் அகிம்சைப் போராட்டத்தின் பெயரால் சிறைத் தண்டனை பெற்றதோ, , பட்டினி போராட்டத்தை நடத்தி உயிர்த்தியாகம் செய்த வரலாறோ கிடையாது. மாறாக தலைவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தடுப்பு காவல் என்பது சிறைத் ததண்டனை என்று கருதப்பட முடியாது. தமிழர் விடுதலைக் கூட்டணி இறுதியாக செய்த உண்ணாவிரதப் போராட்டம் என்பது 1985 ஆம் ஆண்டு அமிர்தலிங்கம் தலைமையில் நல்லூர் வீரகாளியம்மன் கோயிலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சில மணி நேரம் உண்ணாவிரத நாடகத்தை நடாத்த , அப்போது அந்தப் பயனற்ற போராட்ட நாடகத்தை யாழ் நகரின் முன்னணி பாடசாலைகளின் மாணவர்கள் திரண்டு வந்து வலுக்கட்டாயமாக கோழிப் பிரியாணி தீத்தியதுடன் முடிவுக்கு வந்தது.
1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் மேற்கொள்ளப்படும் வரையான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அகிம்சை போராட்டங்களும் தோல்வியில் முடிவடைந்தன. அகிம்சை போராட்டத்தின் தோல்வியின் விளைவு ""தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்"" என்று எஸ். ஜே. வி .செல்வநாயகம் கூறினார்.
இது அதுவரை அவர் நடாத்திய அகிம்சைப் போராட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய தோல்வி பற்றிய ஒப்புதல் வாக்குமூலமாகும். இதற்குப் பின்னர் அரசியல் கட்சிகள் என்ற நிலையைத் தாண்டி தியாக தீபம் திலீபனும் அன்னை பூபதியும் கொள்கைக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க உயிர் தியாகம் செய்தது காட்டினர்.
இவர்களுடைய இந்த உயிர் தியாகம்தான் தமிழ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும், போராட்ட உணர்வையும் வலிமையையும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்தது.எதிரிகள் இவர்களுடைய உயிர் தியாகங்களுக்கு செவிசாய்க்கவில்லை என்றாலும் தமிழ் மக்களுடைய மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை.
தமிழரின் எழுச்சி
இன்றைய நிலையில் இத்தகைய உயரிய தியாகத்தைச் செய்யக்கூடிய ஒரு போராட்டத்தை முன்னெடுத்தால் அது நிச்சயம் தமிழ் மக்களை பேர் எழுச்சிக்கு உட்படுத்தும். அதே நேரத்தில் சர்வதேச கவனத்தையும் ஈர்க்கும்.
சர்வதேசக் கவனத்தை தமிழ் மக்கள் பெற்றுள்ள இக்கால கட்டத்தில் அத்தகைய ஒரு உயரிய போராட்டத்தை தமிழ் தலைவர்கள் முன்வந்து முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து தீவிர தமிழ் உணர்வாளர்களை நிறுத்துவதனாலும் பயன் ஏதும் கிடைக்கப் போவதில்லை. அகிம்சையின் உச்சத்தை திலீபனும் அன்னை பூபதியுமே நிலை நாட்டினார்கள்.
அவர்களுடைய படங்களை வாகனங்களிலும், தோள்களிலும் சுமந்து வீதிகளில் திரிபவர்கள் விளக்கேற்றுவதற்கும், நினைவேந்தலைச் செய்வதற்கும் குடும்பிபிடிச் சண்டை போடுபவர்கள் தியாகி திலீபன், அன்னை பூபதி வழியில் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதற்கு இந்த தமிழ் தலைமைகள் தயாராக உள்ளனரா?
இவ்வாறு இல்லாத போது அவர்களுடைய தியாகத்தின் மீது ஏறி நினைவேந்தல்களுக்கு உரிமைகோரி அரசியல் சவாரி செய்கிறார்கள். இப்போது 1977 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த அரசியல் பாணியில் பேசும் நிலை ஒன்று உருவாகி இருக்கிறது. எல்லாவற்றையும் சாட்டுப் போக்குக்காக செய்யும் நிலைமையும் உருவாகிவிட்டது.
மேற்குறிப்பிட்ட கதவடைப்பு, நிர்வாக முடக்கல், கறுப்பு கொடிகாட்டல், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், என்பவற்றினால் இன்றைய தமிழ் தலைவர்களுக்கு ஒரு தலைமுடிகூட உதிரப் போவதுமில்லை, நரைக்கப் போவதுமில்லை.
எந்த ஒரு வெகுஜனப் போராட்டத்தையும் தமிழ் தலைவர்களால் ஒரு பேரியக்கமாக முன்னெடுக்க இப்போது ஏன் முடியவில்லை? பேரியக்கம் என்ற பரிமாணத்தை பெறவோ, அதை எட்டவோ ஏன் முயற்சிக்கவில்லை.
இத்தகைய தலைவர்களின் வெகுஜன போராட்டங்களை சிங்களத் தலைவர்களோ, சிங்கள மக்களோ, அரசோ கண்டு கொள்ளப் போவதுமில்லை. இத்தகைய போராட்டங்கள் வடக்கு கிழக்குக்குள் குண்டாஞ் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாக மாத்திரமே அமையும்.
இத்தகைய போராட்டங்களால் சிங்கள தேசத்தின் அரசியலுக்கோ, நிர்வாகத்திற்கோ, பொருளியலுக்கோ அல்லது சர்வதேச அரசியலிலோ எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மாறாக வட- கிழக்குக்குள் முடக்கி நடத்துவது என்பது அடுத்து வருகின்ற தேர்தலில் நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றுவதற்கான பாசாங்கு அரசியலே தவிர வேறொன்றும் இல்லை.
உரிமைக்கான போராட்டத்திற்கு தயார்
இவர்கள் இவற்றை தலைநகரான கொழும்பில் நடாத்தினால் உள்நாட்டு,வெளிநாட்டு அரசியல் கவனத்தையாவது பெறலாம்.மேலும் இத்தகைய போராட்டங்கள் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராட இன்றும் தயாராக உள்ளார்கள் என்பதை நிரூபிப்பதாக மாத்திரமே அமையும்.
தற்போது இவர்கள் நிகழ்த்தும் நாடகப் போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு எந்தப் பலனையும் தரப்போவதில்லை. மாறாக தமிழ் மக்களுடைய நேர விரையத்தையும் பொருளியல் விரியத்தையுமே ஏற்படுத்தும்.
தமிழ் மக்கள் மேற்கொள்கின்ற அகிம்சை போராட்டங்கள் அரச நிர்வாகம் முடக்கம், செயற்பாட்டு முடக்கம், வருமான இழப்பு, சர்வதேச கவனத்தை பெறுதல் என்ற அடிப்படையில் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டாலே தவிர சிங்கள அரசு தமிழ் மக்களுடைய அகிம்சை போராட்டங்களை கணக்கில் எடுக்கப் போவதில்லை.
தமிழ் மக்களுக்கு எந்த பலாபலனும் கிடைக்கப் போவதுமில்லை.
அதற்போது வாக்குவேட்டை நாடகப் போராட்டங்களுக்குப் பதிலாக மேற்கூறப்பட்டவாறு அர்த்தமுள்ள போராட்டங்களை இவர்கள் முன்னெடுக்க தயாரில்லை என்றால் பதவிகளைத் துறந்து போராடக்கூடியவர்களுக்கு வழிவிடலாம்.