முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் தொடர்பில் ஒப்பீட்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாவீரர் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் ஏற்பாட்டுக் குழுவினர் இது தொடர்பில் கருத்திலெடுக்க வேண்டும் என்பதும் சில மாவீரர் பெற்றோர்களின் கருத்தாகவும் அமைந்துள்ளது.
மாவீரர் நாள் நிகழ்வுகள் முடிந்த அடுத்த ஒரு நாளில் துயிலுமில்லத்தின் நிலைமைகள் தொடர்பில் அவர்கள் கவலை வெளியிட்டதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
எழுச்சிமிகு நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டு வரும் மாவீரர் நாளினை அடுத்து அந்த இடம் மாவீரர்கள் துயிலுமிடமாக கருதி தூய்மைப்படுத்தல் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்புடைய வாதம்
பல தடைகளுக்கு மத்தியில் கடந்த காலங்களில் மாவீரர் நிகழ்வுகளை முன்னெடுக்கப்பட்டது.
அப்படியிருக்கும் போது இந்த வருடம் அச்சுறுத்தல் மற்றும் தடைகள் மிக குறைவாக இருந்த ஒரு சூழலில் மாவீரர் நாள் முன்னெடுப்புக்கள் அமைந்திருந்தன.
இயற்கை சீற்றத்திற்கு மத்தியிலும் அணிதிரண்டு மாவீரர்களை நினைவு கொண்டு அஞ்சலித்துமிருந்தனர்.
இவையெல்லாம் சீராக நடைபெற்று முடிந்த போதும் மாவீரர் நாளிற்கு அடுத்த ஒரு நாளில் துயிலுமில்லத்தின் நிலைமைகள் இயல்புக்கு மாறான முறையில் இருந்தமை நோக்கத்தக்கது.
மாவீரர் நாளிற்கான ஏற்பாடுகளை செய்து முடித்தது போல் அவற்றை கலைத்து சீராக அகற்றி இடத்தை தூய்மையாக பேண வேண்டியதும் அவர்கள் செயற்பாட்டிற்குள் உள்ளடங்கியிருக்க வேண்டும்.
ஆயினும் அவ்வாறான அவதானிப்புக்களை முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் அவதானிக்க முடியவில்லை.
இது தொடர்பில் மாவீரர் பெற்றோர்களின் கருத்துக்களை பெற முயன்ற போதே அவர்களில் சிலர் தங்கள் ஒப்பீட்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
அகற்றப்படாத பூக்கள்
மாவீரர் நாளினை சிறிப்பிக்க பூக்களால் அர்ச்சிக்கப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டு இருந்தன.
முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தின் ஒரு பகுதி இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பெரும் பகுதி வாழைத்தோட்டமாகவும் ஒரு சிறு பகுதி தனித்தும் விடப்பட்டுள்ளது.மற்றொரு பகுதி முன்னர் வீதியாக இருந்து பின்னர் மாவீரர் துயிலுமில்லத்திற்கு உள்வாங்கப்பட்டிருந்த இடம் இப்போது மீண்டும் வீதியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தனித்து விடப்பட்ட நிலமும் வீதியாக மீளவும் பயன்படுத்தப்படும் நிலமுமாக ஒரு சிறிய பகுதியே இப்போது மாவீரர் துயிலுமில்லத்தின் நிகழ்வுகளுக்காக பயன்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் பூக்கள் தூவி, கற்பூரம் ஏற்றி தீபங்கள் சுடர்விட மற்றும் சாம்பிராணிக்குச்சுகள் எரிக்கப்பட்டு மாவீரர்கள் வழிபடப்பட்டிருந்தனர்.
கல்லறைகள் இருந்த ஒரு பகுதி இப்போது வீதியாக பயன்படுவதால் அக்கல்லறைகள் இருந்த பகுதியும் மீளவும் துயிலுமில்லத்தின் அஞ்சலிக்காக பயன்படுவதால் பூக்கள் வீதியிலும் இருக்கின்றன.
மாவீரர் நிகழ்வுகளை அடுத்த ஒரு நாளில் மீண்டும் வீதியாக பயன்படும் அந்த நிலத்தில் இருக்கும் பூக்களை; அஞ்சலித்ததிற்கான தடங்களை எடுத்தகற்றி விட்டிருக்கலாம்.அல்லது அந்த நிலத்தினை தொடர்ந்தும் வீதியை மூடி மாவீரர் துயிலுமில்ல நிலமாகவே பயன்படுத்த ஆவணை செய்திருக்கலாம் என தம் கருத்துகளை அவர்கள் பகிர்ந்திருந்தனர்.
2009 முன்னர் மாவீரர் துயிலுமில்லத்தினை ஊடறுத்துச் செல்லுமாறு உள்ள இந்த வீதியின் பகுதி மூடப்பட்டு L வடிவில் மாற்று வழி ஏற்படுத்தப்பட்டு இருந்தது.இப்போது அந்த வீதி மூடப்பட்டு இது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
முதல் நாளில் அஞ்சலித்த பூக்கள் மறுநாளில் வாகனங்களால் மிதிக்கப்படும் சூழலை அவதானிக்கும் போது நெஞ்சம் பதைபதைப்பதாக அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்.
பரவிய கற்கள்
தீபங்கள் நாட்டிய இடங்களைச் சூழ உடைந்த சிறு கற்களை எடுத்து அடுக்கியிருந்தார்கள். இது துயிலுமில்லத்தின் நிலம் முழுவதும் தீபங்கள் இருந்த இடங்கள் எல்லாம் தொடர்ந்திருந்தது.
துயிலுமில்ல நிகழ்வுகளுக்காக சீராக்கப்பட்ட நிலத்தில் உடைந்த சிறு கற்களை இவ்வாறு அடுக்கி வைத்து விடுதல் ஏற்பாடுகளுக்கு ஏற்புடைய தோற்றத்தை காட்டினாலும் நிகழ்வுகளின் பின்னர் அவை எடுத்தகற்றப்படாதது விடுதல் அடுத்த முறை ஏற்பாடுகளுக்கு இடையூறாக அமைவதோடு துயிலுமில்ல நிலத்தின் நேர்த்திக்கு பாதகமாகவும் அமையும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
சிதைந்த கற்களை நிலம் முழுவதும் சிதறிப் பரவ இது வாய்ப்பளித்து விடும்.நிகழ்வின் பின்னரான செயற்பாடுகளுள் இவ்வாறு எடுத்தகடுக்கப்பட்ட உடைந்த கற்களை ஒன்றாக்கி குவித்து விட்டிருக்கலாம்.
தீபங்கள் ஏற்றப்பட்டிருந்த இடங்களில் அஞ்சலிக்க போட்ட பூக்களையும் கவனமாக எடுத்தகற்றி அந்த இடங்களின் தூய்மையை பேணுவதான செயற்பாடுகளையும் உள்ளடக்குதல் வரவேற்கப்படக் கூடியதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2009 முன்னர்
1989 முதல் 2008 ஆம் ஆண்டுவரையான மாவீரர் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் படிப்படியான ஆரோக்கியமான மாற்றங்களை தன்னகத்தே கொண்டு வந்திருந்தது.
நாளடைவில் வரவேற்கத்தக்க அனைவராலும் மெச்சத்தக்க செயற்பாடுகளை மாவீரர் பணிமனை கொண்டிருந்தது." அவற்றுள் முதன்மையானதாக மாவீரர் துயிலுமில்லத்தின் தூய்மை பேணப்பட்டிருந்ததை குறிப்பிடலாம்.
இன்றைய நாட்களில் அதுபோல் முடியாது போனாலும் முடிந்தளவுக்கு நேர்த்தியான செயற்பாட்டு வெளிப்பாடுகளை காட்ட முனையலாம் என்பது இது தொடர்பில் கருத்து பகிர்ந்த அனைவரதும் எதகர்பார்ப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மாவீரர் துயிலும் இல்ல நிலங்களை விடுவிக்க முயற்சிப்பதோடு, விடுவிக்கப்பட்டுள்ள நிலங்களை மாவீரர் ஏற்பாட்டாளார்கள் ஒரு கட்டமைப்பிற்குள் உள்வாங்கி தொடர்ந்து தூய்மையாக பராமரிக்க முயற்சிக்கலாம்.
கடந்த காலங்களிலும் பார்க்க இனிவரும் காலங்களில் ஏற்படும் அரசியல் மாற்றங்களை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்க முயல வேண்டும்.
அதற்கு இத்தகைய அணுகுமுறை கைகொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |