ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்கும் யோசனை
உலகளாவிய அரசியலில் யுத்த காலத்தில் ஜனநாயகத் தேர்தல்களை தவிர்ப்பது அல்லது பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகின்றபோதும் தேர்தல்கள் தவிர்க்கப்படுவது பொது விதியாக உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தேர்தல்களை நடத்தாமல் இன்றுள்ள ஜனாதிபதியை தொடர்ந்து மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அப்படியே பதவியில் அமர்த்தி நாட்டினை முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும். என்ற கருத்து தற்போது சிங்கள மக்கள் மத்தியிலும் அரசியல் தரப்புக்கள் மத்தியிலும் பேசப்பட தொடங்கிவிட்டது.
ஜனாதிபதியின் பதவிக்காலம்
இந்தப் பின்னணியில் இலங்கையில் நடத்தப்படக் கூடிய தேர்தல்களும் அவற்றிற்கான வாய்ப்புகள் பற்றியும் பூர்வாங்கமாக அலசுவது அவசியமானது.
ஜனாதிபதியாக அமர்ந்திருக்கும் ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்சவின் பதவிக்காலத்தில் எஞ்சிய காலப் பகுதியையே குறை நிரப்பிடு செய்கிறார். எனவே 2024 ஆம் ஆண்டு இறுதியுடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. . எனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான காலச் சூழலும், அரசியல், பொருளியல் இஸ்த்திரத்தன்மையும் இன்று இலங்கையில் இல்லை. இதனை கருத்தில் கொண்டுதான் நடக்கவிருந்த உள்ளூராட்சி சபை தேர்தல் காலவரையின்றி பிற்போடப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் மாகாண சபை தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ, ஜனாதிபதி தேர்தலோ இப்போதைக்கு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அரிதினும் அரிதாகவே உள்ளன.
இரண்டாம் உலக மகா யுத்தம்
பிரித்தானியாவில் இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து நாடாளுமன்றம் காலநீடிப்புச் செய்யப்பட்டது.
இலங்கையிலும் 1931 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் உருவாக்கப்பட்ட மந்திரி சபை 1947 ஆம் ஆம் ஆண்டு வரைக்கும் தேர்தல் நடத்தப்படாமல் நீடிக்கப்பட்ட வரலாறு எம் முன்னே உதாரணங்களாக உண்டு.
மக்கள் கருத்து கணிப்பு
சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் 1982ல் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இனப்பிரச்சினையை காரணம் காட்டி நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாமல் நாடாளுமன்றத்தை நீடிப்பதற்கான மக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி 52 வீத வாக்குகளால் வெற்றி பெற்றார்.
1978 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 76 விதமான நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றிருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து இந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி 52% வாக்குகளால் தொடர்ந்து 76 % விதமான ஆசனங்களை நாடாளுமன்றத்தில் தக்க வைப்பதற்கான வாய்ப்பை பெற்றது.
உண்மையில் 1982ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்திருக்குமானால் ஒரு தொங்கு நாடாளுமன்றம் அமைவதற்கான சூழலையே ஏற்பட்டிருக்கும். ஆனாலும் ஜே. ஆர் . தனது ராஜதந்திரத்தினால் தொடர்ந்து 3/4 அதிக பெரும்பான்மை ஆசனங்களை நாடாளுமன்றத்தில் தக்க வைக்க முடிந்தது.
இந்த வாக்கடுப்பை இனவாதம், இராணுவவாதம், மதவாதம் என்பவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு முற்றிலும் ஒரு ஜனநாயக விரோதமான ஜனநாயக முறை மீறிய ஒரு சர்வதிகாரத்தை ஜே. ஆர் .ஒரு தேர்தலின் மூலம் நடத்திக் காட்டினார் என்று சொல்வதே பொருத்தமானது.
அரசியல் பொருளியல் நெருக்கடி
இப்போது இலங்கையிலுள்ள அரசியல் பொருளியல் நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய தகுதி வாய்ந்த தலைவர்கள் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இனப்படுகொலையின் பட்டியலில் உள்ள தலைவர்களின் வரிசை நீண்டுள்ளது. இனப்படுகொலையிலும் யுத்த வெற்றிவாதத்திலும் மீதேறி ஆட்சிக்கு வந்த ராஜபக்சர்கள் பொருளாதார நெருக்கடியின் விளைவினாலும் மேற்குலகக் கரங்களினாலும் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இருக்கிறார்கள்.
இருப்பினும் அவர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்களே தவிர அதிகாரங்களில் இருந்து அவர்கள் அகற்றப்படவில்லை. ஏனெனில் இன்று பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. தேர்தல் வெற்றி பெற்றவர்களின் முகங்களாக, பதிலீட்டாளர்களாக நியமிக்கப்பட்டதிலிருந்து இலங்கை ஆட்சி அதிகாரம் தொடர்ந்து ராஜபக்சர்களின் கைகளிலேயே உள்ளது.
இலங்கை ஆட்சி அதிகாரம்
இன்று இலங்கையில் ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடிய அல்லது போட்டி போடக்கூடிய தலைவர்கள் என்ற வரிசையில் ரணில், சஜித், அழகப்பெரும, அனுரகுமார திசநாயக்க போன்றவர்களின் பெயர்களும் உள்ளன.
ராஜபக்சர்கள் போர்க்குற்றம், இனஅழிப்பு, மனித குலத்துக்கு எதிரான குற்றம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளினால் எழுந்து நிற்கமுடியாதளவு அரசியலில் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
அவர்கள் அரசியலில் மேல்நிலைக்கு வருவதற்கு மேற்குலகம் இப்போது தடையாக உள்ளது. எனவே மிளிரக் கூடிய முகமாக ரணில் மாத்திரமே உள்ளார் அவரும் ஒரு தேர்தலை எதிர்கொண்டால் வெற்றி தனித்து பெறுவதற்கான வாய்ப்புமில்லை. அவர் கட்சி அரசியலைத் தாண்டி இப்போது மொட்டுக் கட்சியின் முகமாகவே காட்சி அளிக்கிறார்.
இந்தப் பின்னணியில் இனப்பிரச்சனைக்கு தீர்வு, பொருளாதார நெருக்கடி, போர் குற்றம், இனவழிப்பு போன்ற நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதற்கு தேர்தல்களை தவிர்த்து ஆட்சி நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையும், கருத்துருவாக்கமும், கருத்தியலும் எழுவது இயல்பானதே.
ஜனாதிபதியின் பதவிகாலம்
இந்நிலையைத்தான் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை கால நீடிப்புச் செய்யும் யோசனை சிங்கள மக்கள் மத்தியில் எழுவதும் தவிர்க்க முடியாதாகிறது. ஆசனங்களை கொண்ட நாடாளுமன்றம் இன்று மொட்டுக் கட்சியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை கொண்ட நாடாளுமன்றம் உள்ளது.
இந்த நாடாளுமன்றம்தான் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகியதும் அவருடைய எஞ்சிய காலத்தை குறைநிரப்பு செய்வதற்காக வாக்களித்து பதவியில் அமர்த்தினார்கள்.
இந்நிலையில் இன்றுள் அரசியல், பொருளாதார நெருக்கடியில் ஒரு தேர்தலை எதிர்கொண்டால் ராஜபக்சக்களின் கட்சி பெருமளவு வாக்குவங்கி இழப்பை சந்திக்கும். அதனால் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இழக்க நேரிடும்.
அவ்வாறே ஒரு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டாலும் யார் ஜனாதிபதியாக வருவார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இத்தகைய உள்ளக அரசியல் நெருக்கடி உள்ள நிலையில் கால நீடிப்பு செய்வதுதான் தற்போதைய பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமானதாகும். அதனை அரசியல் பிரமுகர்கள் அனைவரும் ஏகமனதாக முண்டியடித்து ஏற்பார்கள் என்பதும் உண்மையே.
எனவே 1982ல் நாடாளுமன்றத்தை தொடர்ந்து ஆறு ஆண்டுகள் நீடித்ததான நடைமுறைவரலாறு சிங்கள தேசத்திலுண்டு. அத்தகைய முன்னுதாரணத்தை முன்நிறுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்கலாம் என்ற கருத்து பெருமளவு இப்போது துலங்கத் தொடங்கியுள்ளது.
இத்தகைய பதவிக்கால காலநீடிப்பை சட்ட நுணுக்கங்களுக்கூடாக நடாத்தி முடிப்பது இன்றைய நாடாளுமன்றத்திற்கு இலகுவானது. அது அவர்களுக்குப் பெரும் நன்மை தரவல்லது.
இச்செயல்முறை சிங்கள தேசத்தில் சாத்தியமா?. இத்தகைய காலநீடிப்பை பற்றி ஈழத் தமிழர்கள் சரியான முன்னறிவோடு செயல்பட வேண்டும். தமிழர்களுக்கு பாதகமான சூழல்களை முன்னறிவதும், அதற்கான மாற்று வழிகளை, முன்னேற்பாடுகளை தயார்ப்படுத்துவதும் இன்றைய அரசியலில் அவசியமானதாக உள்ளது.
பிரச்சினைகளை இனங்கண்டால் பிரச்சனைக்கான தீர்வை இலகுவாக கண்டுபிடித்துவிட முடியும். சிங்கள மக்கள் மத்தியில் தலைவர் என்றால் மக்களுக்குத் தெரிந்தவர், பிரபல்யமானவர், சரியாக ஆட்சி செய்யக்கூடியவர், மக்களை சரியாக வழி நடத்துபவர், பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பவர், சிங்கள மொழியையும் பௌத்தத்தையும் பாதுகாப்பவர் என்று அர்த்தப்படும்.
இது சரியானதும் கூடத்தான். இப்போதுள்ள தலைவர்களில் ரணிலுக்கே இத்தகைய தகுதிகள் இருப்பதாக தோன்றுகிறது. ரணில் சிறுவயதிலேயே அமைச்சுப் பதவியை வகித்தவர் என்ற அடிப்படையிலும், நெடுங்காலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும்,பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு ஒரு அங்கீகாரம் உண்டு. இவரைவிட தகுதியானவர்கள் யாரும் இப்போது இல்லை என்ற நிலையில் ரணிலை முன்னிறுத்துவதே சிங்கள மக்களுக்கு பொருத்தமானதாகவும் உள்ளது.
அதே நேரத்தில் நாடாளுமன்ற பெரும்பான்மை ஆசனங்களை கொண்டுள்ள ராஜபக்சாக்ககளின் கட்சி உறுப்பினர்களுக்கும் ரணிலை விட்டால் இப்போது வேறுயாருமில்லை என்ற நிலை தோன்றியிருக்கிறது.
அவ்வாறே ராஜபக்சாக்களை சர்வதேச ரீதியாக மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாக்க கூடிய கவசமாகவும் ரணில் விக்ரமசிங்கா உள்ளார்.
இன்று தமிழர்கள் மீதான மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச ரீதியில் எடுத்துச் செல்கின்ற அரச அதிகாரத்துடன் கூடிய வல்லமை ஈழத் தமிழ் மக்களிடம் இல்லை. சில அரசுகளை தமிழ் மக்களுக்காக பேசவைக்கவும் சில தீர்மானங்களை நிறைவேற்றவும் புலம்பெயர் தமிழர்கள் செய்த அடிக்கட்டுமா அரசியலால் செய்து காட்டியிருக்கிறார்கள்.
கனடிய அரசாங்கம் ராஜபக்சாக்களுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம்
கனடிய அரசாங்கம் ராஜபக்சாக்களுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தை உதாரணமாக சொல்லலாம். ஆனாலும் கனடிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. உள்ளக சட்ட நிர்வாக ஒழுங்கில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
எனவே இலங்கை அரசின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை முன்னெடுக்கக்கூடிய அரசு அதிகாரம் மேற்குலக நாடுகளுக்கு உண்டு. மேற்குலகம் சாராது சீனச் சார்புடன் சிங்கள அரசு நடந்தால் அத்தகைய குற்றங்களை முன்னுறுத்தி மேற்குலகம் இலங்கை ஆட்சியாளர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்திவிடும் என்ற அச்சம் சிங்கள தலைவர்களுக்கு உண்டு.
இன்று இலங்கை தீவுக்குள் சீனாவை கொண்டுவந்து நிலைநிறுத்தியவர்கள் ராஜபக்ச குடும்ப ஆட்சிதான் என்றும் இவர்கள் சீன ஆதரவு தளம் என்ற பட்டியலுக்குள் மேற்குலகத்தால் இணைக்கப்பட்டு விட்டார்கள். எனவே ராஜபக்சாக்கள் ஆட்சியில் இருப்பதை ஒருபோதும் மேற்குலகம் விரும்பாது.
இதனை எதிர்கொள்வதற்கு மேற்குலகத்தால் விரும்பப்படும் ஒரு தலைவர் சிங்கள தேசத்திற்கு தேவையாக உள்ளது. அந்த அடிப்படையில் பார்த்தால் ரணில் மேற்குலகத்தாலும் விரும்பப்பட்ட, மேற்குலக சிந்தனாவாதத்தைக் கொண்டவராகவும் இருப்பதனால் அவருக்கு மேற்குலக ஆதரவும் உண்டு.
ஆனாலும் இலங்கையின் உள்ளக அரசியலில் தேர்தலில் போட்டியிட்டு அவரால் தனித்து வெற்றி பெற முடியாது. எனவே அத்தகைய பலமற்ற ஒருவரை தொடர்ந்து அதிகாரத்தில் வைத்திருப்பது ராஜபக்சாக்களுக்கு பாதுகாப்பானதும் நலன் பயக்கக் கூடியதும் ஆகும். இதனை கடந்த பத்து மாதகால ரணிலின் ஆட்சியின் மூலம் ராஜபக்சர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
நாடாளுமன்ற ஆசனம்
இன்றுள்ள நாடாளுமன்ற ஆசனங்களில் ராஜாபக்சாக்களின் மொட்டுக்கட்சியே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இருப்பதினால் அவர்கள் ராஜபக்சர்களை கைவிட்டால் இந்த கட்சி உடைந்துவிடும். கட்சி உடையுமானால் எதிர்காலத்தில் பலருடைய அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிடும்.
எனவே கட்சி உடைவதை மொட்டுக் கட்சியில் உள்ள யாரும் விரும்ப மாட்டார்கள். ராஜபக்சாக்களை தொடர்ந்து வைத்திருப்பதன் மூலமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆசனங்களை தொடர்ந்து தக்க வைக்க முடியும் என்ற நிர்ப்பந்தமும் இங்கு உள்ளது. எனவே ராஜபக்சாக்கள் அரசியலில் இருந்து ஒதுங்க, ஒதுக்கப்பட முடியாத சக்தி.
அதேநேரத்தில் ராஜபக்சேக்கள் முன்வரிசைக்கு வராமல் பின்வரிசையில் இருந்து கொண்டு இலங்கை அரசியலை ஓட்டி செல்வார்கள். அவ்வாறு ஓட்டி செல்வதற்கு ஒரு நம்பிக்கைக்குரிய சாரதி அவர்களுக்கு தேவையாகவே உள்ளது. அத்தகைய ஒரு நம்பிக்கைக்குரிய சாரதியாக இன்று ரணில் காட்சியளிக்கிறார்.
எனவே மக்கள் மத்தியில் பலமற்ற, கட்சிப்பலமற்ற ஒருவரை தமக்கு பாதுகாப்புக் கவசமாக முன்நிறுத்துவது ராஜபக்சக்கு பொருத்தமாக உள்ளது. அதே நேரத்தில் ராஜபக்சர்களின் கட்சியை பயன்படுத்தி அவர்களுடைய ஆதரவுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதுவே ரணிலுக்கும் பொருத்தமானது.
ரணில் இலங்கையின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க வேண்டுமானால் ராஜபக்சாக்களை அனுசரித்து அவர்களை பாதுகாப்பது அவசியமாகிறது. எனவே அரசியலில் "பரஸ்பர நலன்களின் அடிப்படையிற்தான் உறவுகள் நீடிக்கின்றன" என்ற அடிப்படையில் ராஜபக்சாக்களும் ரணிலும் ஓரணியில் நிற்கின்றனர்.
எனவே இன்றுள்ள ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றுவது இன்றைய நிலையில் சாத்தியமானது.அத்தகைய ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை தொடர்ந்து இன்னும் 5 ஆண்டுகள் நீடிப்பதற்கான ஒரு பொதுவாக்கெடுப்பை இலங்கை அரசியலமைப்புச் சட்ட ஓட்டைகளுக்கூடாகவும், நடைமுறைகளுக்கூடாகவும், நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு ஊடாகவும், சங்கஆணை அல்லது மகாசங்க ஆலோசனை, நாட்டின் நெருக்கடியை கடப்பதற்கான தந்துரோபாயம் என்ற காரணங்களை காட்டி பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
பொது வாக்கெடுப்பு
இவ்வாறு ஒரு பொது வாக்கெடுப்பை நடத்துவதைவிட இன்னொரு மார்க்கமும் இலங்கை அரசியல் நடைமுறைகளில் மேற்கொள்ளக்கூடிய ஒன்றாகவும் உள்ளது. ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்துவதும் இன்றைய காலச் சூழலில் நெருக்கடியாக உள்ளது என்ற காரணத்தைக் காட்டி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கின்ற இன்றைய அரசாங்கம் நாடாளுமன்றத்துக்குள்ளேயே ஒரு மசோதாவை கொண்டு வந்து சட்டமாக நிறைவேற்றுவதன் மூலம் நாடாளுமன்றத்துக்குள் ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்கின்ற ஒரு தேர்தலை நடத்தவும் முடியும்.
இதற்கு இப்போதுள்ள அரசியல் யாப்பில் ஏற்பாடுகள் இல்லையாயினும் நாடாளுமன்ற தில்லுள்ள 3/2 பெரும்பான்மையைப் பயன்படுத்தி பொருத்தமான திருத்தங்களைக் கொண்டுவர வாய்புண்டு. இலங்கை அரசியல் யாப்பு நடைமுறையில் கற்பைக் கொண்டதல்ல. அவர்கள் எப்படியும் தமக்கேற்ற மாற்றங்களை நாடாளுமன்றத்தின் பெயரால் செய்துவிடுவார்கள்.
இவ்வாறு ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்தாமல் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான ஒரு வழியை சிங்கள ராஜதந்தரிகளால் தேட முடியும். அதனை ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலமாகவும் அவர்களால் உறுதி செய்ய முடியும். இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் "இலங்கை நாடாளுமன்றத்துக்குள் ஆணை பெண்ணாக்க முடியாதே தவிர மற்றைய அனைத்தையும் அவர்களால் செய்து முடிக்க முடியும்"என்பதுவே உண்மை.
எனவே இன்றைய நிலையில் இலங்கை அரசியலில் யாரும் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் இல்லை. எனவே தேர்தல் இன்றி தொடர்ந்து நாடாளுமன்றத்தையும் ஜனாதிபதியையும் தக்க வைப்பதற்கான முஸ்த்திப்புகளே இலங்கை அரசியலில் துலங்கத் தொடங்கி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் தமிழ் மக்கள் அதிகம் முன்னறிவுடன் திட்டமிட்டுச் செயற்படத் தயாராக வேண்டும்.

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
