ஈழத்தை வழங்க மறுத்த அரசாங்கம் சீழத்தை வழங்கியுள்ளது –சுமந்திரன்
ஈழத்தை வழங்க மறுத்த தற்போதைய அரசாங்கம் தற்பொழுது சீழத்தை வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று அபாய நிலை நான்கில் இருப்பதாகவும் அரசாங்கம் மூன்றாம் நிலையில் இருப்பதாக கூறிய போதிலும் உண்மை அதுவல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு பெருந்தொற்று ஒன்றுடன் போராடி வரும் இவ்வாறான ஒர் தருணத்தில் கொழும்பு துறைமுக நகர் தொடர்பில் விவாதம் நடாத்துவதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புத் துறைமுக நகர் அபிவிருத்தி ஆணைக்குழு தொடர்பிலான சட்ட மூலம் குறித்து உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை கோராது இருந்திருந்தால் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக நகர் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலில் தனியொரு நாட்டுக்கான அனைத்துவிதமான விடயங்களும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரின் ஒர் பகுதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் டுவிட்டரில் பதிவிட்ட போது, அந்த விடயம் குறித்து இலங்கை அரச தரப்பு பொறுப்புவாய்ந்த எவரும் பதிலளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இலங்கைக்கான சீனத் தூதரகம் இந்த பெயர்ப்பலகையில் தமிழ் மொழி உள்ளடக்கப்படாமை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என டுவிட்டரில் பதிலளித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் எல்லைக்குட்பட்ட ஓர் பகுதியில் பெயர்பலகை தொடர்பிலான பிரச்சினைக்கு சீனத் தூதரகம் ஏன் பதிலளிக்க வேண்டுமென அவர் அவையில் கேள்வி எழுப்பியுள்ளார். குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி தண்டனை விதிக்கப்படக்கூடிய அதிகாரத்தை இந்த ஆணைக்குழுவிற்கு அரசாங்கம் வழங்கியிருந்தது எனவும் உச்ச நீதிமன்றம் இதனை நிராகரித்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆணைக்குழு குறித்த சரத்துக்களில் எல்லைக் கட்டுப்பாடு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சமஷ்டி ஆட்சி முறையில் எல்லைக் கட்டுப்பாடு என்ற விடயம் உலகில் எங்குமே கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட ஏற்பாடுகளின் ஊடாக இந்த அரசாங்கம் நிலம் மற்றும் நீர் எல்லைகளை சீனாவிற்கு தாரைவார்த்து கொடுத்துள்ளது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
