எதிர்ப்புகளை தடுக்கவே அரசாங்கம் மே தினக் கூட்டங்களை நிறுத்தியுள்ளது - ஹிருணிக்கா
தொழிலாளர் உரிமைகளுக்காக குரல் கொடுபதற்கான மே தினக் கூட்டங்களை அரசாங்கம், கோவிட் போர்வையில் நிறுத்த முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் சுகாதார சட்டத்திட்டங்களை மீறி நுவரெலியா வசந்தகால களியாட்டை நடத்தியது. அவற்றுக்கு எந்த கோவிட்டும் இல்லை.
மே தினத்தில் அரசாங்கத்திற்கு எதிராக ஏற்படும் பல்வேறு எதிர்ப்புகளை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் மே தினக் கூட்டங்களை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. புத்தாண்டு காலத்தில் அரசாங்கம் நுவரெலியாவில் வசந்தகால களியாட்டங்களை நடத்தியது.
அப்போது கோவிட் வைரஸ் பரவலை சாதாரணமாக எடுத்துக்கொண்டது. எனினும் கோவிட் நோயாளிகள் அதிகரிப்பார்கள் எனக் கூறி அரசாங்கம் மே தினக் கூட்டங்களை நிறுத்தியுள்ளது.
உதய கம்மன்பில, விமல் வீரவங்ச போன்றோர் தனியாக மே தினக் கூட்டங்களை நடத்தினால் என்ன கூற போகிறார்களோ என்று அரசாங்கம் பயந்தது. அது மாத்திரமல்ல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக மே தினக் கூட்டத்தை நடத்தினால், பொதுஜன பெரமுனவின் பலம் குறைந்து போகும்.
இதன் அச்சம் காரணமாகவே அரசாங்கம் மே தினக் கூட்டங்களை நிறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும் மக்களை சுரண்டி சாப்பிட்டு, பொய்யால் ஓடும் அரசாங்கம் 2023 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து விடும். கட்டாயம் அரசாங்கம் கவிழும். மக்களுக்கு இந்த அரசாங்கம் மீது கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது எனவும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.