கொரோனாவால் மரணிக்கும் ஆபத்தை இரட்டிப்பாக்கும் மரபணு: தெற்காசியாவிலேயே அதிகம்
கோவிட் தொற்று காரணமாக நுரையீரல் செயலிழந்து மரணிக்கும் ஆபத்தை இரண்டு மடங்காக அதிகரிக்கும் மரபணு தெற்காசியாவில் வாழும் நபர்களிடம் கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மரபணு தெற்காசிய பின்னணியை கொண்ட நபர்களிடம் 60 வீதம் காணப்படுவதாக தெரியவந்துள்ளதுடன் இது தெற்காசியாவை சேர்ந்தவர்கள் மத்தியில் கோவிட் ஆபத்து அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது எனவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மரபணு, ஐரோப்பிய வசம்சாவளியை சேர்ந்த நபர்களில் 15 வீதமானோரிடம் காணப்படுகிறது. ஆபிரிக்க, கரீபிய வம்சாவளியினர் மத்தியில் 2 வீதமாக காணப்படும் இந்த மரபணு, கிழக்காசியாவை சேர்ந்த 1.8 வீதமானோரிடம் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று நோயானது சில மரபணு சமூகத்தில் அதிகளவான ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது புரிந்துக்கொள்ள வேண்டிய விடயம் என ஒக்ஸ்பேர்ட் பல்கலை்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழுவின் பேராசிரியர் ஜேம்ஸ் டேவிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மரபணு காரணமாக கோவிட் வைரஸ் இலகுவாக நுரையீரலை தாக்குவதுடன் அதனை தடுக்கும் கட்டமைப்பை செயலிழக்க செய்கிறது.
எனினும் இதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்புக்கு எந்த பாதிப்பு ஏற்படுவதில்லை. எது எப்படி இருந்த போதிலும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதன் மூலம் இந்த ஆபத்தை மேலும் தடுக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.