கொரோனாவை அதி விசேட காரணியாக கவனத்தில் கொண்டு சந்தேகநபருக்கு பிணை வழங்கிய கோட்டை நீதவான் நீதிமன்றம்
கொரோவை அதி விசேட காரணியாக கவனத்தில் கொண்டு கோட்டை நீதவான் நீதிமன்றம் சந்தேகநபருக்கு பிணை வழங்கியுள்ளது.
2019 ஜனாதிபதித் தேர்தலின் போது புத்தளத்தில் இருந்து 222 பேருந்துகளில் 12000 இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு வாக்களிக்க செல்ல போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து 9.5 மில்லியன் ரூபாய் அரச சொத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மூன்றாம் சந்தேகநபரான அழகரட்ணம் மனோரஞ்சனே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்ற நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தை அடுத்து சந்தேகநபர் கோட்டை நீதவான் பிரியந்த லியனகேவினால் நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கின் முதலாவது பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பொது சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுதலை செய்ய விசேட காரணியாக மருத்துவ அறிக்கைகள் இல்லாததினால் கடந்த 27.10.2020 அன்று பிணை மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கின் மூன்றாம் சந்தேகநபரான அழகரட்ணம் மனோரஞ்சன் சார்பில் மீண்டும் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டு பிணை மனு மீதான விசாரணை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கொரோனா தாக்கம் அதிகரித்தமையையும், கொரோனா காரணமாக மகசின் சிறைச்சாலையில் மரணம் ஏற்பட்டுள்ளதனையும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனது வாதத்தில் முன்வைத்துள்ளார்.
மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினை பிணை வழங்குவதற்கான விசேட காரணியாக கருத்தில் கொண்டு மூன்றாம் சந்தேகநபரான அழகரட்ணம் மனேரஞ்சனை பிணையில் விடுதலை செய்யும்படி சட்டத்தரணி கே.வி.தவராசா கோரிய நிலையில் அழகரட்ணம் மனோரஞ்சன் கோட்டை நீதவானால் ஒரு லட்சம் ரூபா ரொக்கப் பிணையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.