பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த யானை
பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த குடும்பம் ஒன்றிற்கு யானை அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
சுற்றுலா சென்ற பிரான்ஸ் குடும்பத்தை யானை ஒன்று துரத்தி துரத்தி தாக்கியுள்ளது.
யால, வெல்மல்கெம பிரதேசத்தில் நந்தமித்திர என்ற யானையின் தாக்குதலால் பிரான்ஸ் சுற்றுலா குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற ஜீப் பலத்த சேதமடைந்துள்ளது. அத்துடன் நீண்ட போராட்டத்தின் பின்னர் குறித்த குடும்பத்தினர் காப்பாற்றப்பட்டதாக யால தேசிய பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யானைகள் சரணாலயத்திற்கு பயணித்த பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகளை நந்திமித்ரா தாக்க ஆரம்பித்தவுடன், அவர்கள் உயிருக்கு பயந்து கூச்சலிட ஆரம்பித்துள்ளனர். அந்த குழுவினர் கூச்சலிட்டதால் ஜீப்பில் வந்த மற்றொரு குழுவினர் சத்தம் கேட்டு தேசிய பூங்கா அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர்.
கடுமையான தாக்குதல் மேற்கொண்ட யானை அவர்களின் தொடர் கூச்சலினால் காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளது.
மிகப்பெரிய போராட்டத்தின் பின்னர் இந்த பிரான்ஸ் குடும்பத்தினர் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அவற்றினை பார்வையிட்டால், அவை யாருக்கும் தீங்கு விளைவிக்காது, மேலும் அவற்றின் அருகில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளால் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதென யால தேசிய பூங்காவின் பொறுப்பதிகாரி மனோஜ் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் யானை தாக்குதலில் ஜீப் வண்டி சேதமடைந்துள்ள போதிலும் சுற்றுலாப் பயணிகள் யாரும் காயமடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.