வடமாகாணத்தில் அதிகளவு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள்: ஆர்.எல்.வசந்தராஜா
வடமாகாணமானது போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மாகாணமாக காணப்படுவதுடன் போரிற்கு பின்னரான காலப்பகுதியில் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதிகமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் அதிகமாக காணப்படும் பகுதியாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் அதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர்.எல்.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பொன்றிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்டவர்கள் நெருக்கடியில்
அதில் மேலும், வடமாகாணமானது போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மாகாணமாக காணப்படுவதுடன் போரிற்கு பின்னரான காலப்பகுதியில் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதிகமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் அதிகமாக காணப்படும் பகுதியாகும்.
குறிப்பாக யுத்தத்தினால் கணவரை இழந்த 40,000 குடும்பங்கள் இருப்பதாக சமூக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், போரினால் அங்கவினம் அடைந்தவர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பராமரிப்பற்ற நபர்கள், பிள்ளைகள் அதிகமான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
அதுமட்டுமன்றி பாரிய பொருளாதாரச்சுமை அவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்வதற்கு கணிசமான அளவு பங்களிப்பு செய்து வருகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி மேற்படி மக்கள் வகுப்பினரை வெகுவாக பாதிக்கலாம்.
அவர்கள் மத்தியில் அதியுச்ச வறுமை குடிகொள்ளல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டம் கொள்ளல் என்பதனை அதிகரிக்கலாம்.
அதிகமான மன அழுத்தம் ஏற்படும்
அரச மட்டத்தில் பல்வேறு திட்டங்கள் பொருளாதாரம் தொடர்பில் இப்பிராந்தியங்களில் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவற்றின் வெற்றிகள் தொடர்பிலான பதிவுகள் குறைவாகவே காணப்படுவதுடன் கொண்டு வரப்பட்ட பொருளாதார திட்டங்கள், உண்மையான தேவை மற்றும் பயனாளியின் இயலுமை பற்றி அறியாமை மற்றும் பின்தொடர்தல் பொறிமுறை இன்மை போன்ற காரணங்களினால் வெற்றியளிக்கவில்லை எனலாம்.
எப்படி இருப்பினும் தற்போதய பொருளாதார நெருக்கடி குறிப்பாக நிரந்தர வலுவிழந்தோர் குடும்பம், கணவர் அற்ற குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் என்போர் மத்தியில் அதிகமான மன அழுத்தத்தினை ஏற்படுத்தும் என்பதுடன் பல விருப்பத்தகாத முடிவுகளை எடுக்கவும் தூண்டும். என அவரால் குறிப்பிடப்பட்டுள்ளது.