ஜெனிவாவில் தமிழர்களின் தற்போதைய தேவைப்பாடு
ஐ.நா.மனித உரிமைகள் பேரவை 46ஆவது கூட்டத்தொடரின் ஆரவாரங்கள் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளன. பிரித்தானியா தலைமையில் ஆறு நாடுகள் கூட்டுச் சேர்ந்து இலங்கை தொடர்பாக முன்வைத்த பிரேரணை பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியுள்ளது.
டொனமூர் அரசியல் யாப்பு போல பிரேரணையோடு தொடர்புடைய இலங்கை அரச தரப்பையும் தமிழ்த்தரப்பையும் பிரேரணை திருப்திப்படுத்தியதாக இருக்கவில்லை. உறுப்பு நாடுகளின் அபிப்பிராயங்களின் பின்னர் பிரேரணையில் மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் தமிழ் மக்களுக்கு சார்பாக எதுவும் வரப்போவதில்லை. முன்னைய பிரேரணைகளின் விவாதத்தின் பின்னரே பிரேரணையின் உள்ளடக்கம் நீர்த்துப் போவது வழக்கம். இந்தத் தடவை பிரேரணையே நீர்த்துப்போன நிலையில் தான் வெளி வந்திருக்கின்றது.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் அதற்குச் சார்பான நாடுகளும் பிரேரணையை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளன. மனித உரிமை அமைப்புக்கள் பிரேரணை தொடர்பாக பெரிய திருப்தியைக் கொண்டிராது விட்டாலும் பிரேரணையை வரவேற்கின்றன. இலங்கை அரசாங்கம் பிரேரணையை முழுமையாகவே நிராகரித்துள்ளது. அதனை தோற்கடிப்பதற்காக அங்கத்துவ நாடுகள் மத்தியில் பிரசாரங்களையும் முடுக்கிவிட்டுள்ளது.
இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் நேரடியாகவே களத்தில் இறங்கியுள்ளன. பாகிஸ்தான் அதிக முனைப்புடன் செயற்படுகின்றது என்று கூறலாம். குறிப்பாக முஸ்லிம் நாடுகளை வளைத்துப் போடுவதற்கு அது பாரிய முயற்சிகளைச் செய்துவருகின்றது. முஸ்லிம் நாடுகளை திருப்திப்படுத்துவதற்காக முஸ்லிம்களின் ஜனாஸா அடக்கத்திற்கும் அனுமதி வழங்கியுள்ளது. இன்னோர் பக்கத்தில் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை தேற்றுவிப்பதற்காக கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்யும் யோசனையையும் முன்வைத்துள்ளது.
ஜெனிவா பிரேரனை தொடர்பில் உலகமே பனிப்போர் காலம் போல இரண்டாகப் பிளவடைந்துள்ளது. அமெரிக்கா, மேற்குலகம் சார்பான அணி பிரேரணையை ஆதரிக்க சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் அணிபிரேரணையை எதிர்க்கின்றது. சிரியப் போரில் இடம் பெற்ற பனிப்போர் இங்கும் மேகம் கொண்டுள்ளதைப் போலவே தெரிகின்றது.
இது இன்னோர் வகையில் பனிப்போரின் தெற்காசிய விஸ்தரிப்பு எனலாம். அமெரிக்கா – மேற்குலக - இந்தியக் கூட்டின் இந்தோனேசியா – பசுபிக் மூலோபாயத் திட்டத்திற்கும் சீனாவின் ஓரேபட்டி ஒரேபாதைத் திட்டத்திற்கும் இடையிலான போர் எனவும் கூறலாம்.
பிரேரணை ஒரு தரப்பு வெற்றிபெற்றாலும் பனிப்போர் தொடர்வதற்கான வாய்ப்புக்களே அதிகளவில் உள்ளன. முன்னரே கூறியது போல தமிழ்த்தரப்பு பிரேரணை தொடர்பாக கடும் அதிருப்தியடைந்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அறிக்கையுடன் எதிர்பார்ப்புக்களை வளர்த்துக் கொண்ட தமிழ்த் தரப்பு தற்போது மோசமாக நொருங்கிப்போயுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதல், நாடுகள் தங்களது நீதிமன்றங்களில் விசாரணை செய்தல், பயணத்தடை, சொத்து முடக்கம் போன்ற ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இருந்த விடயங்கள் தமிழ் மக்களிடம் பலத்த எதிர்பார்ப்புக்களை வளர்த்திருந்தன. இந்தத் தடவை ஜெனிவாவில் ஒரு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கைகளும் வளர்ந்திருந்தன. ஆனால், இலங்கை அரசு ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிராகரித்தமை, பூகோள அரசியல் என்பன தமிழ்த் தரப்பிலுள்ள முன்னேறிய பிரிவினர் மத்தியில் நம்பிக்கைகளை வளர்த்த போதும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அறிக்கைகள் தான் சாதாரண மக்கள் மத்தியில் நம்பிக்கைகளை வளர்த்திருந்தது. அந்த நம்பிக்கைகள் அனைத்தும் தற்போது பொசுங்கிப் போயுள்ளன.
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மனித உரிமை மீறல்களை நேரடியாக அனுபவித்தவர். அரசின் அடாவடித் தனங்களுக்கு தனது தந்தையையும், காதலனையும் பறிகொடுத்தவர், நீண்டகாலம் சிறையில் இருந்தவர். அவருக்கு இதன் வலி அனுபவ பூர்வமாகவே தெரியும். அவரது அறிக்கை காட்டமாகவே வெளிவருவதற்கு இப்பின்னணியும் ஒரு காரணம்.
தவிர மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகருக்கு மனித உரிமைகள் விவகாரம் தான் முதல் நிலைத்தெரிவு சர்வதேச அரசியல், பூகோள அரசியல் என்பன வெல்லலாம் அவருக்கு இரண்டாம் நிலை தான். ஆனால் வல்லரசுகளுக்கு சர்வதேச அரசியலும் பூகோள அரசியலும் தான் முதல் நிலைத் தெரிவாகும். மனித உரிமை விவகாரங்கள் இரண்டாம் நிலை தான்.பிரேரணை நீர்த்துப் போன வடிவத்தில் வெளிவந்தமைக்கு இந்த யதார்த்த நிலை தான் காரணம்.
பிரேரணையில் தமிழ் மக்களுக்கு சாதகமான விடயங்கள் இரண்டு தான். சாட்சியங்களைத் தொகுத்தல், ஐ.நா. கண்காணிப்புப் பொறிமுறையை உருவாக்குதல் என்பவையே அவையாகும்.
இதில் முதலாவது விடயம் தமிழ்த்தேசியக் கட்சிகளினால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளிலும் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழர் என்று எந்த இடத்திலும் குறிப்பிடாமை, இலங்கை முழுவதற்குமான மனித உரிமை விவகாரமாக வெளிப்படுத்தல் செய்தமை, தமிழ்த்தரப்பு எதிர் நோக்கும் அண்மைக்கால ஆக்கிரமிப்புக்கள் தொடர்பாக எதுவும் பேசாமை, அரசியல் கைதிகள் விவகாரம் பற்றி எதுவும் பேசாமை என்பனவும் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்திகளை வளர்த்துள்ளன.
தமிழ்த் தரப்பு பிரேரணைகளை எதிர்க்காமல், அதுபற்றிய விமர்சனங்களை பெரிதாக முன்வைக்காமல் தங்களது அடிப்படைக் கோரிக்கையான சர்வதேச குற்றவிய நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதல் என்பதை தற்போது முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான போராட்டங்கள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரித்தானியாவில் அம்பிகை என்ற பெண்மணி சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். அவருக்கு ஆதரவாக தாயகத்தில் யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. புலம்பெயர் நாடுகளிலும் வெவ்வேறு வகையான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் தேர்தல் காலமாக இருப்பதால் பெரியளவிற்கு போராட்டங்கள் வளரவில்லை. இந்தப் போராட்டங்கள் இன்னமும் பெரியளவிற்கு எழுச்சியடையவில்லை.
“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான” போராட்டத்துடன் ஒப்பிடும் போது எழுச்சி மிகக் குறைவாகவே உள்ளது. போராட்ட வடிவங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம். உலக தழுவிய வகையிலான எழுச்சி இல்லாமல் உலகின் கவனத்தை திசை திருப்ப முடியாது. வரும் நாட்களில் முன்னேற்றங்கள் உருவாகலாம். ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத் தொடரின் ஆரவாரங்கள் கடைசிக்கட்டத்தில் இருக்கும் போது சம்பந்தப்பட்ட தரப்புக்களின் நகர்வுகளும் எழுச்சியடையத் தொடங்கியுள்ளன.
அதற்கேற்ற அளவுக்கு மட்டும் விவகாரத்தை உயர்த்திப் பிடிக்க விரும்புகின்றது. குறிப்பாக சிங்கள லிபரல்களை சங்கடப்படுத்தும் எந்த நகர்வுகளையும் முன்னெடுக்க அது தயாராக இல்லை. சிங்கள தேசத்தில் பெருந்தேசியவாதம் ஆதிக்க கருத்தியலாக இருப்பதனால்சிங்கள லிபரல்கள் அதற்கு கட்டுப்பட்டவர்களாகவே உள்ளனர்.
போர்க்குற்றம், தமிழ்மக்களுக்கான மனிதஉரிமை மீறல்கள் என்பன பெரும் தேசியவாதத்தின் முடிவு. அதாவது பெரும் தேசியவாதம் மேலாதிக்கம் செலுத்தும் சிங்கள அரசின் முடிவு. அதனை பெரியளவில் கேள்விக்குட்படுத்துவது பெரும் தேசியவாதத்தைக் கோபப்படுத்தி அதன்வழி சிங்கள லிபரல்களையும் பலவீனப்படுத்தும். எனவே போர்க்குற்ற விவகாரங்களையும், தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை விவகாரங்களையும் ஒரு மட்டத்திற்கு மேல் கொண்டுசெல்வதற்கு மேற்குலகம் தயாராக இல்லை.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தைப் பொறுத்தவரை இலங்கைத் தீவிலும் அதன்வழி இந்துசமுத்திரப் பிராந்தியத்திலும் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்கு இந்தே-பசுபிக் மூலோபாயத்திட்டத்தையே இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கிற்கு முழு இலங்கைத் தீவுமே அதற்குத் தேவை அதுவும் பெரும் தேசியவாதத்துடன் மோதாத நிலையை பின்பற்றுவதற்கு பிரதான காரணம். இந்த இலக்கிற்கான சூழல் இருக்கும் வரை தமிழர் விவகாரத்தை ஒரு கட்டத்திற்கு மேலெடுக்க மாட்டாது.
சிங்கள தேசம் முழுமையாக சீனாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு அமெரிக்க– மேற்குலக - இந்தியக் கூட்டத்திற்கு சிறிய இடம் கூட அங்கு இல்லை என்ற நிலை வரும் போது தான் தமிழ் மக்கள் விவகாரத்தை இவை கையிலெடுத்து முன்னிலைப்படுத்தும். அதுவரை தமிழ் மக்கள் கறிவேப்பிலை தான். எனினும் தமிழ் மக்களை முழுமையாக கைவிட அவற்றினால் முடியாது ஏனெனில் சிங்கள தேசத்தைக் கையாள்வதற்கு அவற்றிற்கு கிடைத்த ஒரேயொரு கருவி தமிழ் மக்கள் மட்டும் தான்.
மேற்குலகின் இந்தப் பலவீனத்தை தமிழ்த் தரப்பு சரியாக புரிந்து கொள்ளுமாக இருந்தால் தமிழத்தரப்பும் இந்த மைதானத்தில் கௌரவமாக விளையாட முடியும். இதற்கு சர்வதேச அரசியல், பூகோள அரசியல் பற்றிய பாரிய புரிதலும், அதனை ஒட்டிய செயற்பாடுகளும் தமிழ்த்தரப்பிற்கு தேவை.
இலங்கைத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் நிலை தான் மிகவும் பரிதாபகரமானது. இலங்கை தொடர்பான அதன் இராஜதந்திரம் படுதோல்வியடைந்திருக்கின்றது. ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைத்தீவு தனது பொக்கற்றுக்குள் இருக்கும் என்று இந்தியா நினைத்தது. அந்த நினைப்புக்கு மாறாக இலங்கைத்தீவு சீனாவின் பொக்கற்றுக்குள் சென்று விட்டது. தற்போது இந்தியா என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திற்கு இலங்கைத்தீவு கேந்திரப் பிரச்சினை மட்டும் தான். இந்தியாவிற்கு கேந்திரப் பிரச்சினையுடன் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையும் உண்டு. தேசியப் பாதுபாப்பு தான் அதற்கு முக்கியமானது. எனவே இலங்கைத்தீவு தொடர்பாக இந்தியா மௌனமாக இருக்க முடியாது. புலிகள் இயக்கம் இருக்கும் வரை அவர்களது ஆயுதப்போராட்டம் தென்னாசியாவின் அதிகாரச் சமநிலையை பேணுவதில் பெரும் பங்களிப்பைச் செய்திருந்தது.
அதன் வழி இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் அதிகாரச்சம நிலையைப் பேணுவதிலும் ஆயுதப் போராட்டம் பங்களித்திருந்தது. இந்த அதிகாரச் சமநிலை இந்திய தேசியப் பாதுகாப்பிற்கும் சாதகமாக இருந்தது. தற்போது அதிகாரச் சமநிலை சீனாவிற்கு சார்பாக குழப்பப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு கேள்விக் குறியாகவுள்ளது. இந்தியாவைச் சூழ உள்ளநாடுகள் அனைத்திலும் (மாலைதீவு தவிர்ந்த) சீனா மேலாதிக்கம் செலுத்துகிறது.
பெரும் தேசியவாதம் மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்ற தளத்தில் தான் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்தியா என்னதான் சலுகைகளை வழங்கினாலும் பெரும் தேசியவாதம் இந்தியாவிற்கு சார்பாக இருக்கப்போவதில்லை. இலங்கைத்தீவில் இந்தியாவிற்குச் சார்பாக இருக்கப்போகின்றவர் இலங்கைத் தமிழரும், மலையகத் தமிழரும் தான்.
இரண்டு தரப்பையும் பலமான நிலையில் வைத்திருப்பதற்கு இந்தியா முயற்சித்திருக்க வேண்டும். மாறாக தனது தற்காலிக நலன்களுக்காக இரண்டு மக்கள் கூட்டத்தையும் பலவீனமாக்கும் செயற்பாட்டையே இந்தியா வரலாற்று ரீதியாக மேற்கொண்டிருந்தது. ஆயுதப் போராட்டம் அழிக்கப்படுவதற்கு பிரதான காரணம் இந்தியா தான். அதனை மஹிந்த ராஜபக்ஷவே பல தடவை ஏற்றுக்கொண்டிருக்கின்றார். அப்போராட்டத்தை அழித்தன் மூலம் தமிழ் மக்களை பெருந்தேசியவாதத்தின் வாயில் கொண்டுபோய் இந்தியா விட்டது. தமிழ் மக்களை இந்தியா படுமோசமாக பலவீனப்படுத்தியது. தற்போது தமிழ் மக்கள் விரும்பினாலும் இந்தியாவைப் பாதுகாக்க முடியாத நிலை நடைமுறையில் உள்ளது.
மறுபக்கத்தில் சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மலையக மக்களை நாடு கடத்தியதன் மூலம் மலையக மக்களை பலவீனமாக்கியது. இதனையொரு இனச்சுத்தீகரிப்பு என்றும் கூட கூறலாம். ஒரு வேலை நிறுத்தம் மூலம் இலங்கையின் அரச அதிகாரக் கட்டமைப்பை அசைக்கக் கூடிய நிலையில் இருந்த மலையக மக்கள் தங்களது இருப்பைப் பேண முடியாதளவிற்கு பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா தனது கடந்த காலத்தை முழுமையாக மீள் பரிசீலனை செய்து திட்டங்களை வகுப்பதன் மூலமே இப்போக்கில் மாற்றங்களைச் செய்ய முடியும். இலங்கை அரசு ஏதாவது செய்து இந்தியாவை சமாளிப்பதற்கு முயல்கின்றது. சீனாவை திருமணம் செய்து கொண்டு இந்தியாவுடன் வாழ விரும்புவதாக நடிப்புக்காட்டுகின்றது. ஒரே நேரத்தில் துறைமுக கிழக்கு முனையம், திருகோணமலை எண்ணெய்க் குதங்கள், தீவுப்பகுதிகளில் காற்றாலைகள் என்று பல பிரச்சினைகளை இந்தியாவிற்கு எதிராக இலங்கை கிளப்பி விட்டுள்ளது. இதில் அவற்றுக்கு தீர்வுகாண முடியாமல் இந்தியா தடுமாறுகின்றது. ஜெனிவாவில் இந்தத் தடவை இந்தியா தமிழர் விவகாரத்தையும் கிளப்பியுள்ளது.
பிரேரணை வாக்கெடுப்பின்போது இந்தியா நடுநிலை வகிப்பதற்கே அதிக வாய்ப்புண்டு. தமிழ்த்தரப்பின் நிலைதான் அதிக கவலைக்குரியது. ஜெனிவா விவகாரத்தில் தங்களுக்கிடையோயான முரண்பாடுகளை தவிர்த்து சிங்களதேசம் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.
தமிழ்க் கட்சிகள் மட்டும் தங்களுக்கிடையே குடுமிச் சண்டை நடாத்திக்கொண்டிருக்கின்றன. போராட்டங்களை பொது அமைப்புக்கள் முன்னெடுக்கின்றனவே தவிர தமிழ்க் கட்சிகள் முன்னெடுக்கவில்லை. ஜெனிவா தொடர்பாக தமிழ்த்தரப்பிடையே பொது அரசியல் நிலைப்பாடும் அதற்கான ஒருங்கிணைந்த வேலைத்திட்டமும் அவசியம்.
இப்போது எழும் கேள்வி தமிழ்த் தரப்பு இந்தப் பணிகளை முன்னெடுக்குமா? சந்தர்ப்பங்கள் மீளவும் வரும் எனக் கூறுவது கடினம். கிடைக்கின்ற சந்தப்பங்களை பயன்படுத்தாவிட்டால் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
- சி.அ.யோதிலிங்கம் -

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
