நாடு அமைதியுற்றால் மாத்திரமே முன்னேற்றமடையும் - வஜிர கருத்து
நாடு அமைதியாக இருக்கும் பட்சத்தில் மாத்திரமே அந்நிய முதலீடுகளை ஈர்த்து நாட்டை அபிவிருத்தி பாதையில் முன் கொண்டு செல்ல முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வஜிரஅபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வங்குரோத்து நிலை
அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதியின் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் பயணங்களின் பிரதிபலன்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும். வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்து ஆசியக் கண்டத்தில் மாத்திரமன்றி முழு உலகிலும் மதிப்பான இடமொன்றுக்கு நாட்டை வழிநடத்தி செல்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும்.
அதற்காக அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கொண்டிருக்கின்றார். இலங்கையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவும், எதிர்வரும் தேர்தல் ஒன்றை இலக்கு வைத்தும் செயற்படுவதை கைவிட வேண்டும்.
அவற்றை நோக்காக கொண்டு நாட்டில் தொடர்ந்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மேற்கொள்வதை தற்காலிகமாக கைவிட வேண்டும்.
நாடு அமைதியுற்றால் மாத்திரமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் முதலீடு செய்ய முன்வருவார்கள். அதன் மூலம் நாடு முன்னேற்றமடையும்.
சுற்றுலாப் பயணிகள்
முதலீட்டாளர்கள் மாத்திரமன்றி சுற்றுலாப் பயணிகளும் அமைதியற்ற நாடொன்றில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள விரும்ப மாட்டார்கள். அவர்களும் அமைதியான இடமொன்றில் தங்கள் ஓய்வை கழிக்கவே விரும்புவார்கள்.
வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்தியடைந்த நாடாக ஜனாதிபதியின் செயற்பாடுகளை சர்வதேசம் ஏற்றுக் கொண்டதன் காரணமாகவே கடந்த நாட்களில் பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு அதிகரித்து பங்குச் சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.
அவ்வாறான நிலையை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அந்நிய முதலீடு, சுற்றுலாப் பயணத்துறை, பங்குச் சந்தை இவை மூன்றும் சரியான முறையில் கையாளப்பட்டால் நாடு தானாக அபிவிருத்தி அடைய தொடங்கும்.
அதற்கு நாட்டில் அமைதியான சூழல் நிலவ வேண்டும்.
போராட்டங்கள்
தற்போது எதிர்க்கட்சிகளும் வேறு சில தரப்புகளும் தொடர்ந்தும் போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் என முன்னெடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நாட்டை மேலும் படுபாதாளத்தில் தள்ளிவிடும்.
அத்துடன் நாட்டின் முன்னேற்றத்துக்கும் தடையாக அமைந்து விடும். எனவே பொதுமக்கள் இவ்வாறான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது. தேசிய சபையில் தங்கள் கருத்துக்களை முன்வைக்க அரசியல் கட்சிகளுக்கு மாத்திரமன்றி ஆர்வம் உள்ள அனைவருக்கும் சந்தர்ப்பம் உள்ளது.
அங்கு சென்று உங்கள் மாற்று கருத்துக்களை
முன்வைத்து நாட்டை மீட்டெடுக்க உங்கள் ஆதரவை வழங்க முன்வாருங்கள் என்று நான்
அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றேன். ” என குறிப்பிட்டுள்ளார்.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
