சுத்தம் செய்யப்பட்ட புத்தங்கல குப்பை மலை
அம்பாறை பிரதேசத்தின் குப்பை மலையாக காட்சியளித்த புத்தங்கல பிரதேசம், 'க்ளீன் ஶ்ரீ லங்கா' செயற்திட்டத்தின் மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், அங்குள்ள புத்தங்கல ஆரண்ய சேனாசன வனப்பகுதியில் தொடர்ச்சியாக கொட்டப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் குப்பை மலையொன்று உருவாகியிருந்தது.
இதற்கிடையே, குப்பை மலைக்கு யானைகள் உணவு தேடி வரத் தொடங்கியதன் காரணமாக அப்பிரதேசத்தின் ஊடான போக்குவரத்து பாதுகாப்பற்றதாக மாறியது.
நீண்ட நாள் சிகிச்சை
கடந்த 2024ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் அம்பாறையில் நடைபெற்ற பொசோன் வலயத்தைப் பார்வையிடச் சென்ற 65 வயதான முதியவர் ஒருவரும், இன்னொரு பொலிஸ் உத்தியோகத்தரும் புத்தங்கல பிரதேசத்தில் வைத்து காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான முதியவர் உயிரிழந்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் நீண்ட நாள் சிகிச்சையின் பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்தார்.
அது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்கள் அதற்கு முன்னரும் இடம்பெற்றிருந்தன.
மகிழ்ச்சி
அதேபோன்று, இரசாயனக் கலவைகள் கொண்ட குப்பைகளை உணவாக உட்கொண்டதன் காரணமாக கடந்த 2024ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் புத்தங்கல குப்பை மலையில் காட்டுயானையொன்று உயிரிழந்திருந்தது.
இந்நிலையில், குறித்த குப்பை மலை நேற்றைய தினம் 'க்ளீன் ஶ்ரீ லங்கா' செயற்திட்டத்தின் ஊடாக சுத்தப்படுத்தப்பட்டு, அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளது.
காட்டு யானைகளுக்கும், அவ்வழியால் போக்குவரத்தில் ஈடுபட்ட மனிதர்களுக்கும் பெரும் ஆபத்தாக இருந்த புத்தங்கல குப்பை மலை அகற்றப்பட்டமை தொடர்பில் அம்பாறை பிரதேச சிவில் சமூக அமைப்புகள் பலவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |