ராஜபக்ச அரசாங்கத்திற்கு பேராயரின் சிவப்பு எச்சரிக்கை! - ஐநாவை நாடும் கத்தோலிக்க பேரவை (Video)
நம் நாட்டில் இந்தப் பிரச்னையைத் தீர்த்து, நம் மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம். ஆனால் அவை தோல்வியடைந்துவிட்டது.
எனவே, சர்வதேச சமூகத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதை நாங்கள் ஆராய்வோம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“நாங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு மட்டுமல்ல, எங்களுடன் தொடர்பு வைத்திருக்கும் சக்தி வாய்ந்த நாடுகளுக்கும் செல்வோம். அந்த நாடுகளுக்கு நாம் எம் வேண்டுகோளை முன்வைப்போம்.
கத்தோலிக்க திருச்சபை ஒரு சர்வதேச அமைப்பு. உலகம் முழுவதும் எங்களுக்கு தொடர்பு உள்ளது. பேராயர் என்ற முறையில் எனக்கு சக்தி வாய்ந்த நாடுகளில் மற்ற சகோதர பேராயர்கள் உள்ளனர், எனவே எங்களுக்கு அதைச் செய்ய முடியும்.
இதற்கு உள்ளூரிலேயே பதில் கிடைக்கும் என எதிர்பார்த்தோம், ஆனால் அது நிறைவேறவில்லை. உள்நாட்டில் இவை எதுவும் நடப்பதை நாங்கள் பார்க்கவில்லை.
நீதிபதியின் கீழ் உள்ள சட்ட அமைப்பு ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கருத்தில் கொள்ளவில்லை. எனவே, சர்வதேசத்திற்கு செல்வதைத் தவிர எங்களிடம் தீர்வு இல்லை.” என அவர் மேலும் கூறியுள்ளார்.
