ஜப்பானுக்கான செலவுகளையும் இன்னும் திருப்பி செலுத்தாத கோட்டாபய அரசாங்கம்!
ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன நிதியுதவியுடன் கொழும்பில் மேற்கொள்ளப்படவிருந்த இலகு தொடரூந்து திட்டத்துக்கான நட்டக் கொடுப்பனவுகளை இலங்கை அரசாங்கம் இன்னும் வழங்கவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தினால் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தினால் ரத்துச்செய்யப்பட்டமையை அடுத்து, அதற்கான திட்ட ஆலோசகர்களுக்கான செலவுகள், அத்துடன் திட்டம் ரத்துச்செய்யப்பட்டமையால், திட்டத்துக்கு சுமார் 5 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டதாக மதிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் அவை இன்னும் தீர்க்கப்படவில்லை.
2019 இல், 30 பில்லியன் யென் (அமெரிக்க டாலர் 285 மில்லியன்) கடனுக்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம், ஜப்பானின் சர்வதேச ஒத்துழைபை்பு நிறுவன ( JICA)உடன் கையெழுத்திட்டது.
இதற்கான மொத்த திட்டச் செலவு 246,641 பில்லியன் யென் (2.3 பில்லியன் டொலர்கள்) என மதிப்பிடப்பட்டது
இதற்கமைய, ஆலோசகர்கள் 2019 ஆம் ஆண்டில் தமது பணியை ஆரம்பித்தனர்.
எனினும், திட்டத்துக்கான நிதியொதுக்கீடு அதிகம் என்று கூறி, 2020 செப்டம்பரில், ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, JICA-வின் நிதியுதவியுடன் கூடிய இந்த திட்டத்தை நிறுத்துமாறு போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார்,\
இதனையடுத்து, 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரையில் திட்டத்தின் ஆலோசகர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
எனினும் இந்த மாத தொடக்கத்தில், ஜப்பானின் இலகு தொடரூந்து திட்டம் தொடர்பில் கருத்துரைத்திருந்த வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், குறித்த திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளத்தக்க விடயங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் பிரச்சினையில்லை என்று தெரிவித்திருந்தார்.