முல்லைத்தீவில் சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உள்ளாக்கிய இளைஞன் இந்தியாவிற்கு தப்பியோட்டம்
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 வயதுடைய சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உள்ளாக்கிய இளைஞன் இந்தியாவிற்கு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த 14 வயதுடைய சிறுமி கடந்த ஜுன் மாதம் 11 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் அவர் தவறான செயற்பாட்டிற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
தப்பி சென்றுள்ள சந்தேக நபர்
இதையடுத்து, சிறுமியிடம் சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சிறுமியை கடந்த ஏப்ரல் மாதம் முள்ளியவளை பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, சிறுவர் நன்நடத்தை பிரிவினால் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான இளைஞனை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்ட வேளை இளைஞன் கிராமத்தில் இருந்து தலைமறைவாகிய நிலையில் தற்போது இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றச்செயல் புரிந்த சந்தேகநபரான இளைஞனை கைதுசெய்யும் நடவடிக்கையில் இலங்கை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |