கிளிநொச்சி அரச பேருந்துகளின் மோசமான செயல்: பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள்
மாலைநேரக் கல்விக்காக வெளிமாவட்டங்களிலிருந்து கிளிநொச்சி வரும் பருவகால பயணச்சீட்டுக்களை கொண்ட மாணவர்களை அரச பேருந்துகள் ஏற்றாமல் செல்வதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாங்குளம் பிரதேசத்திலிருந்து மேலதிக கல்விக்காக கிளிநொச்சி வரும் மாணவர்கள் தினமும் பயணிப்பதற்கு பருவகால பயணச்சீட்டை பெற்று வைத்துள்ளனர்.
இவர்களது கல்வி நடவடிக்கைகள் மாலை 5.30 மணிக்கு நிறைவு பெறும். அதனையடுத்து, கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கு வரும் அவர்களை சில அரச பேருந்துகள் ஏற்றாமல் சென்றுவிடுகின்றன.
பொது மக்கள் கோரிக்கை
இதன் காரணமாக அவர்கள் இரவு ஏழு மணி கடந்தும் வீதியிலும், பேருந்து நிலையத்திலும் காத்திருந்து தங்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் பயணிக்கின்றனர். சில மாணவர்கள் பருவகால பயணச்சீட்டை வைத்திருந்தும் நேரத்தோடு வீடு செல்வதற்காக பணத்தை கொடுத்தும் பயணிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தாமதமாக தினமும் வீடு செல்கின்ற காரணத்தினால் சில பெற்றோர்கள் பாதுகாப்பு கருதி தங்களது பிள்ளைகளை மேலதிக கல்விக்காக அனுப்புவதனை நிறுத்திவிட்டதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.
எனவே, உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி பருவகால பயணசீட்டை கொண்டுள்ள மாணவர்களின் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







