தண்ணீரூற்று சைவப் பாடசாலை வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு (Photos)
தண்ணீரூற்று சைவப் பாடசாலை வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நீர் தேங்கி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுகிறது.
மாங்குளம் - முல்லைத்தீவு பிரதான வீதியையும், மாமூலையையும் இணைக்கும் வீதி சைவப் பாடசாலை வீதியாக இருக்கின்றது.
பிரதான வீதியுடன் இணையும் இடத்தில் 10 மீட்டரிலும் சற்று கூடிய தூரத்திற்கு கலங்கல் நீர் வழிமறித்து தேங்கி நிற்கிறது.
பாடசாலை மாணவர்கள், அரச வேலைக்குப் போவோர் என அதிகளவில் மக்கள் போக்குவரத்தினை கொண்ட இந்த பாதையின் நுழைவாயில் சகதியான நீரால் நிரம்பியிருப்பதால் நெருக்கடிகளை எதிர் நோக்குகின்றனர்.
வீதியின் முழு நீளமும் கொங்றீற்று இடப்பட்டுள்ள போதும் இந்த ஒரு சிறு இடம் மட்டும் இப்படி நெருக்கடியை ஏற்படுத்தியவாறு இருப்பதாக முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றியிறக்கும் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களும் இந்த இடம் சீர் செய்யப்பட வேண்டும் என தங்கள் கருத்துக்களை குறிப்பிட்டனர்.
முயற்சி தோல்வி
மழை காலங்களில் வெள்ள நீர் கடந்து செல்லும் வீதியின் இந்த குறுகலான பகுதியில் இரு புறங்களிலும் சீமெந்து கட்டுக்களை கட்டி மண் நிரப்பி சீர் செய்த போதும் அவை முழுமையடையவில்லை.
நீர் வடிந்தோடும் வகையில் திட்டமிடலை மேற்கொண்டு செப்பனிடப்படாமையே இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு காரணம் என இந்த வீதியில் தன் வீட்டைக் கொண்ட ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த வீதியின் இரு புறங்களிலும் நீரூற்றைக் கொண்ட மண்ணையும் வெள்ள நீர் வடிந்தோடும் பகுதிகளையும் இது கொண்டுள்ளமை அவதானிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாமூலையில் இருந்து ஓடி வரும் வெள்ள நீர் இந்த பகுதியினூடாகவே ஊற்றங்கரை நீரேந்து பகுதிக்குச் செல்கின்றது. இந்த இடத்திற்கு அண்மையில் பிரதான வீதியிலும் அமைக்கப்பட்ட பாலம் பொருத்தமற்றிருந்து, வெள்ளம் தேங்கிய காலம் ஒன்றும் இருந்தது.
அது பின்னர் சீர் செய்யப்பட்டு விட்டது. அது போல் இந்த பாலமும் நீண்ட காலமாக சீர் செய்வதில் தீர்வின்றி கிடக்கின்றது என தன் நினைவை பகிர்ந்து கொண்டார் ஒரு முதியவர்.
மூன்று பாடசாலைகளுக்கான மாணவர்களின் பாதை
தண்ணீரூற்று சீ.சீ.றோ.க பாடசாலை, தண்ணீரூற்று சைவப்பாடசாலை, முள்ளியவளை வித்தியானந்த கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் இந்த வீதியை பயன்படுத்துகின்றனர். பாடசாலை சீருடையுடன் பயணிக்கும் போது சீருடைகள் அழுக்கடைகின்றன.
இந்த இடம் சீர் செய்யப்பட்டால் இலகுவான பயணமாக தமக்கு இருக்கும் என வித்தியானந்தா கல்லூரி மாணவர் குறிப்பிட்டமையும் நோக்கலாம்.
பிரதேச சபைகளோ வீதியபிவிருத்தி திணைக்களத்தினரோ இது பற்றி கரிசனை கொள்ளாதது ஏமாற்றமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.







