தையிட்டி விகாரை பிரச்சினை தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்கள்
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு யாழ்ப்பாணம் எம்.எஸ்.சி.02 இராணுவ முகாமின் புலனாய்வு துறைக்கு பொறுப்பான அதிகாரியின் செயற்பாடே காரணம் என புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வின் அந்தரங்க செயற்பாடுகள்
அமைப்பின் தலைவர் அஜித் பி தர்மபால மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் எம்.எஸ்.சி.02 இராணுவ முகாமின் புலனாய்வு துறைக்கு பொறுப்பான அதிகாரி, தென் இலங்கையின் பிரபல அரசியல் கட்சியில் இணைந்து செயற்படும் சிலரின் தேவைக்கேற்ப செயற்பட்டு வருகிறார்.
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையை மையப்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தி யாழ்ப்பாணத்தில் பதற்றத்தை உருவாக்கி அதை நாடு முழுவதும் கொண்டு செல்வதே இவர்களின் நோக்கமாகும்.

இவ்வாறான சம்பவம் ஒன்று நடக்கப் போவதாக புலனாய்வுத் தகவல்கள் ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளது.ஒரு கிழமைக்கு முன்னரே பெரும் குழப்பத்திற்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.