மீண்டும் வெடிக்கும் தாய்லாந்து - கம்போடிய எல்லைப் பிரச்சினை
தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்சினை மீண்டும் போராக வெடித்துள்ளது.
மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்று(26.12.2025) கம்போடிய எல்லைப் பகுதிகளில் தாய்லாந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
திடீர் தாக்குதல்
தாய்லாந்து விமானப்படை தனது F-16 போர் விமானங்கள் மூலம் சுமாராக 40 குண்டுகளை வீசியதாகக் கம்போடியத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இருப்பினும், பொதுமக்கள் வெளியேறிய பிறகு தீவிரவாதிகளின் நிலைகளை மட்டுமே தாங்கள் தாக்கியதாகத் தாய்லாந்து விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் தொடங்கிய இந்த மோதல்களில் இதுவரையில், 41 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் பத்து லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது 500 மைல் நீளமுள்ள எல்லைப் பரப்பு முழுவதும் போர் பரவியுள்ளது.
குறிப்பாக, சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்த விஷ்ணு சிலையைத் தாய்லாந்து அகற்றியமை இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தம்

தற்போது எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.
எல்லையில் அமைதி நிலவ இரு நாடுகளும் சில நிபந்தனைகளுக்கு உடன்பட்டால் மட்டுமே போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என் தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விராகுல் தெரிவித்துள்ளார்.
நாளை இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ள நிலையில், இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
