தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டு வெடிப்பு:15 பேர் பலி
தாய்லாந்தின் தென் பகுதியில் 17 இடங்களில் இன்று நடந்த குண்டு வெடிப்புகள் மற்றும் தீவைப்புச் சம்பவங்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் அதிகாலையில் நடந்துள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட்டணி,நாராதிவத், யால ஆகிய தாய்லாந்தின் தென் பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
பெரும்பாலும் சிறிய கடைகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தாய்லாந்து இராணுவ பேச்சாளர் பிரமோதே பிரோமின் தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு சந்தேக நபர் ஒருவர் யால, யஹா மாவட்டங்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் மற்றும் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து கறுப்பு பை ஒன்றை அங்கு வைத்து விட்டு சென்றுள்ளார்.
அத்துடன் மரணிக்க விரும்பவில்லை என்றால், அங்கிருந்து வெளியேறுமாறு ஊழியர்களுக்கு எச்சரித்துள்ளதாக தாய்லாந்து பொலிஸார் கூறியுள்ளனர்.
ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறி 10 விநாடிகளுக்கு பின்னர் குண்டு வெடித்துள்ளது.
தாய்லாந்தின் தென் பகுதியில் அதிகரித்து வரும் மோதலான நிலைமை
மலேசியா எல்லையில் அமைந்துள்ள தாய்லாந்து நகரங்களில் அண்மைய காலமாக மோதலான நிலைமை உருவாகி வருகிறது.
அங்கு நடக்கும் வன்முறைகளை கண்காணித்து வரும் டீப் சவுத் என்ற அணியினர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மோதல்கள் காரணமாக 7 ஆயிரத்து 300 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தின் தென் பகுதியில் மலாய் இன போராளிகள் குழு தனி நாடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.