பழைய காகித கடைக்கு சென்ற 8 இலட்சம் பெறுமதியான புத்தகங்கள் - சாரதி உட்பட ஐவருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்குச் சொந்தமான சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்களை, அவை கொண்டு செல்லப்பட்ட வழியில் வேறு ஒருவருக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சுமார் 19,000 பாடநூல்கள், வெறும் 47,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தலங்கம பொலிஸாரால் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழைய காகித கடைக்கு சென்ற பாடசாலை புத்தகங்கள்
ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, குறித்த பாடநூல்களை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி, புத்தகங்கள் அனைத்தையும் பழைய காகிதங்களை கொள்வனவு செய்யும் நபர் ஒருவருக்கு விற்பனை செய்து, அதற்காக 47,000 ரூபாவைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் கடுவலை நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.