ஐ.மக்கள் சக்தி மீது பயங்கரவாத தாக்குதல் எனக் கூறிய நபரின் முகவரி அமைச்சர் வாசுதேவவின் வீடு
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கொழும்பு கருவாத்தோட்டம் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்த நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் புத்திக சீ. ராகல நேற்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபரின் மனநலம் தொடர்பில் மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜெகநாதன் ஜோசப் பிள்ளை என்ற இந்த நபர், கடந்த 15 ஆம் திகதி கருவாத் தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னிடம் உள்ள மிகவும் இரகசியமான தகவல் சம்பந்தமாக முறைப்பாடு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
பொலிஸாரிடம் துண்டு சீட்டு ஒன்றை வழங்கியுள்ள இந்த நபர், குறித்த பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமான முறைப்பாட்டை செய்துள்ளார். கருவாத் தோட்டம் பொலிஸார், முறைப்பாடு செய்த நபர் சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் இதுவரை முடிவடையவில்லை எனவும் அவர் தனது முகவரியாக அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் வீட்டின் விலாசத்தை வழங்கியுள்ளார் எனவும் ஜெகநாதன் ஜோசப் பிள்ளை என்ற பெயரில் அந்த வீட்டில் எவரும் வசிக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர் நிரந்தரமான முகவரியை கொண்ட நபர் அல்லது என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
