உக்ரைன் எல்லையில் போர் பதற்றத்தின் எதிரொலி! - பிரித்தானியாவில் எரிபொருள் விலை உச்சத்தை எட்டியது
உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக பிரித்தானியாவில் எரிபொருள் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, வார இறுதியில் பெட்ரோல் லீட்டருக்கு 148.02pயை எட்டியுள்ளதுடன், டீசல் விலை கடந்த வியாழன் அன்று லீட்டருக்கு 151.57p என்ற புதிய சாதனையை எட்டியது.
உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கும் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பாவில் நிலைமை மேலும் மோசமடைந்தால், ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபடலாம் என கூறப்படுகின்றது. இதனால் எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம், "எரிபொருளின் விலை முடிந்தவரை போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்வோம்" என தெரிவித்துள்ளது.
தீவிரம் அடையும் உக்ரைன் - ரஷ்யா பதற்றம்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுவதை தடுக்க ஐக்கிய நாடுகள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. 2014ம் ஆண்டு, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது.
சோவியத் யூனியனில் அங்கம் வைத்த உக்ரைன் நாட்டில், மக்கள் பேசும் மொழி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை உள்ளிட்டவை ரஷ்யாவை ஒத்துப் போகும். ஆனால், எல்லை பிரச்சினை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாடு ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்காவும் தனது ஆதரவை அளித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை சிறிது சிறிதாக குவித்து வருகிறது.
இதுதொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவைக் கேட்டுக்கொண்ட போதிலும், ரஷ்யா படைக்குவிப்பை நிறுத்தவில்லை. போர் நடத்துவதற்கு தேவையான சுமார் 70 சதவீத பணிகளை ரஷ்யா செய்து முடித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் சுமார் ஒரு இலட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
பைடன் போரிஸ் ஜோன்சன் அவசர பேச்சு
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் அச்சுறுத்தல் உலகில் தற்போது ஏற்பட்டுள்ள மிகவும் ஆபத்தான மற்றும் கடினமாக சூழ்நிலையென பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் - ரஷ்ய விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரித்தானிய பிரதமர் அவசரமாக பேசவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியர்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு
இதற்கிடையில், உக்ரைனில் எஞ்சியிருக்கும் அனைத்து பிரித்தானியர்களும் தங்களால் முடிந்தவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் உடனடி ரஷ்ய ஆக்கிரமிப்பு இருக்கக்கூடும் என்பதை நாங்கள் மிகவும் தெளிவாகக் கூறுகிறோம்" வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
"எங்கள் முதல் முன்னுரிமை பிரித்தானிய குடிமக்களைப் பாதுகாப்பதாகும் - வணிக வழிகள் இன்னும் இருக்கும் போது பிரித்தானியர்கள் அங்கிருந்து இப்போது வெளியேற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"எங்கள் கவனம் உக்ரைனில் உள்ள பிரித்தானிய பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில் உள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.
எல்லையில் போர் பதற்றம் - உக்ரைனுக்கு விமான போக்குவரத்து ரத்து
ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைனுடனான விமான போக்குவரத்தை சில நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன.
டச் விமான நிறுவனமான கே.எல்.எம். மறு அறிவிப்பு வரும் வரை உக்ரைனுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரேனிய ஏர்லைன் ஸ்கைஆப் நிறுவனத்தின் ஐரீஸ் குத்தகைதாரர் உக்ரேனிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை செய்வதாக அறிவித்ததை அடுத்து போர்ச்சுக்கல்லில் இருந்து உக்ரைனின் கீவ் நகருக்கு சென்ற விமானம் மால்டோ வன் தலைநகர் சிசினாவுக்கு திருப்பி விடப்பட்டது.
இதேபோல் சில நாடுகளும் உக்ரைனுடனான விமான போக்குவரத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உக்ரைன் அகதிகளை ஏற்க தயாராகும் போலந்து இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் ஏற்பட்டால் உக்ரைன் அகதிகளை ஏற்க தயாராக இருப்பதாக போலந்து அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகள் உக்ரைனில் தங்கள் தூதரக பணிகளைக் குறைக்கும் நிலையில், உக்ரைன் மக்கள் அதிக அளவில் வெளியேற்றும்போது ஏற்படும் சிரமத்தை போக்குவதற்காக தனது தூதரக நடவடிக்கைகளை தொடர்வதாக போலந்து கூறுகிறது.
You My Like This Video