இந்தியாவின் லடாக் எல்லையில் பதற்றம் - ஆயுத பலத்தை அதிகரித்து வரும் சீனா மற்றும் இந்தியா
இந்தியாவின் கிழக்கு லடாக் பிரதேசத்தின் எல்லை சம்பந்தமாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக இரண்டு தரப்பினரும் அந்தந்த எல்லை பகுதியில் ஆயுத பலத்தை அதிகரித்து வருகின்றனர்.
சீனா கிழக்கு லடாக் எல்லையில் இராணுவம் மற்றும் புதிய இராணுவ உபகரணங்களை பயன்படுத்தி தனது இராணுவ பலத்தை அதிகரித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்திரம் பகாவி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், இந்தியாவும் தனது எல்லையில் இராணுவ பலத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எல்லை தொடர்பான இணக்கப்பாடுகளை தன்னிச்சையாகவும், இலகுவாகவும் சீனா மீறி வருவதாகவும், அது அமைதிக்கும், சமாதானத்திற்கும் தடையாக இருப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்தியாவின் கொள்கைகள் மற்றும் சட்டவிரோத எல்லை மீறலே இந்த பதற்றத்திற்கு காரணம் என சீனா குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே சீன மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்கள், கசகஸ்தானின் டுஷன்பே நகரில் சந்தித்து இது சம்பந்தமாக கடந்த செப்டம்பர் மாதம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.
இதன் போது தற்போதுள்ள எல்லை தொடர்பான இணக்கப்பாட்டை கூடியளவில் பாதுகாப்பது என இணக்கம் காணப்பட்டிருந்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் பகுதியில் சீன மற்றும் இந்திய இராணுவங்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதுடன், குறிப்பிடத்தக்களவு உயிர் சேதங்களும் ஏற்பட்டன.