கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பகுதியில் வெளியூர் வியாபாரிகளுக்கு தற்காலிக தடை
கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் கோவிட் தொற்றின் அபாயநிலை காணப்படுவதால் கிண்ணியாவிற்கு வெளியூர் வியாபாரிகள் வர தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கிண்ணியா நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நழீம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கோவிட் மிக வேகமாகப் பரவி தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணித்தவர்களின் எண்ணிக்கையும், நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதன் அபாயத்தை உணர்ந்து பொது மக்களாகிய நீங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு, உங்களையும், உங்கள் குடும்பத்தையும், சமூகத்தையும், பாதுகாத்துக் கொள்ளுமாறு, அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
எனவே பொதுமக்களாகிய நீங்கள் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களை முழுமையாகக் கடைப்பிடித்து நடக்குமாறும், அவசரத் தேவைகள் இன்றி வெளியில் செல்வதனை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறும், பொது இடங்களில் ஒன்று கூடுவதையும், மரண வீடுகளுக்குச் செல்வதையும், திருமண வைபவங்கள் மற்றும் இதர வைபவங்களில் கலந்து கொள்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இன்று முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்த கடைகளை மூடி, ஒத்துழைப்பு வழங்கக் கிண்ணியா வர்த்தக சங்கம் ஒப்புதல் வழங்கியதற்கமைய, அனைத்து அத்தியாவசிய பொருட்கள் அற்ற கடைகளும் மூடப்படுவதுடன், தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாராந்த சந்தை மற்றும் கருவாட்டுக் கடைகளை மூடுவதன் மூலம் வெளியார் வருகையைக் கட்டுப்படுத்தலாம் என்பதால் மட்டக்களப்பு பிரதான வீதியில் இருக்கும் அனைத்து கருவாட்டுக் கடைகளும் இன்று முதல் மூடப்படும்.
மேலும் வாகனங்களில் கிண்ணியா தவிர்ந்த பிரதேசங்களிலிருந்து அங்காடி வியாபாரம் செய்ய வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதை அறியத் தருகிறேன்.
இத் தீர்மானம் இன்றிலிருந்து 7 நாட்களுக்கு அமுலில் இருக்கும். நிலைமை சீராகாதவிடத்துச் சுகாதார ஆலோசனைக்கமைய நீடிக்கப்படும் என்பதையும் அறிவிக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
