இனவாதத்தை பரப்பும் எல்லாவெல தேரரை கண்டிக்க வேண்டும்: சபா குகதாஸ்
எல்லாவெல மேத்தானந்த தேரரை இந்து அமைப்புக்கள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சைவக் கோயில்கள் விகாரைகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளதாகவும், கந்தரோடையில் ஐம்பதுக்கு அதிகமான விகாரைகள் இருந்ததாகவும் பொய்களைக் கூறும் எல்லாவெல மேத்தானந்த தேரரையே இவ்வாறு கண்டிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இன்றையதினம் (04.07.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, இலங்கைத் தீவில் தமிழ் மன்னர்கள் காலத்தில் தான் பௌத்தம் முதலில் கொண்டுவரப்பட்டது என்ற பல உண்மைகளை வரலாற்றுத் தொன்மைகள், ஓலைச் சுவடிகள், பிராமிக் கல்வெட்டுக்கள் ஆதாரப்படுத்துகின்ற போதும், அதனை மறைத்து தமிழ் பௌத்த ஆதாரங்களைச் சிங்கள பௌத்தமாக மாற்றி விட வேண்டும் என்ற நோக்கில் இனங்களிடையே இனவாத தீயைப் பற்ற வைக்கிறார் தேரர்.
வரலாற்று ஆய்வாளர்களும் ஆதாரங்களும்
முத்துசிவன் அனுராதபுரத்தை அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் முத்துசிவனின் மகன் தீசன் அனுராதபுரத்தை ஆட்சி புரியும் போது, தான் பௌத்தம் தீசனின் அனுமதியுடன் இலங்கையில் பரப்பப்பட்டது. இதனை மகாவம்சம் கூட பதிவு செய்துள்ளது.
தீசன் பின்னர் தேவநம்பியதீசன் என அழைக்கப்பட்டான். அவனால் முதலாவது விகாரை தூபராமதூபி என்ற பெயரில் புத்தரின் புனிதப் பொருட்கள் வைத்துக்கட்டப்பட்டது.
இந்த தூபராமதூபி முன்னர் சிங்களத்தில் மாகேஐ கோயில் என அழைக்கப்படும். சைவர்களால் மகேசன் அல்லது மகேஸ்வரன் அல்லது சிவன் எனக் குறிப்பிடப்படும் சிவன் கோயில் இருந்த இடத்திலேயே அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்களும் ஆதாரங்களும் கூறுகின்றன.
இலங்கை ஒரு சிவபூமி
கந்தரோடையில் ஐம்பதுக்கு அதிகமான விகாரைகள் இருந்ததாக மிக மோசமான பொய்யைச் சித்தரித்துள்ளார்.
உண்மையாக கந்தரோடையில் தமிழ்ப் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் அவர்களின் சமாதிகளே அரை உருண்டை வடிவில் அருகருகே அமைக்கப்பட்டிருந்து அவை வழிபாட்டிற்குரிய விகாரைகள் இல்லை.
தேவநம்பிதீசன் காலத்தில் வடக்கு, கிழக்குப் பகுதியில் தமிழ் நாக மன்னர்கள் பிரதேச ரீதியாக ஆட்சி புரியும் போது, அவர்களும் தமிழ்ப் பௌத்தம் பரவ ஒத்துழைப்பு வழங்கியதன் ஆதாரமே பௌத்த தொன்மைகளாகக் காணப்படுகின்றன. அவை சிங்கள பௌத்தம் இல்லை.
இலங்கை மிகத் தொன்மை வாய்ந்த சிவபூமி என்பதற்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருமூலரின் திருமந்திரத்தில் இலங்கை ஒரு சிவபூமி என்பதற்கான ஆதாரம் உண்டு.
தேரரால் அறிவிக்க முடியுமா..!
அது மட்டுமல்ல, குருந்தவூர் என்ற குருந்தமரம் தொடர்பாக மாணிக்கவாசகரின் திருவாசகம் சிறப்பாகக் கூறுகின்றது. அத்துடன் பஞ்ச ஈச்சரங்கள் அவற்றுள் பாடல் பெற்ற வடக்கு, கிழக்கின் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் சிறந்த சான்றாதாரம்.
ஆகவே, மேத்தானந்த தேரர் அப்பட்டமான பொய்யைக் கட்டவிழ்த்து இனவாத்தை தூண்டி நாட்டை மேலும் படுகுழியில் தள்ள முயல்கிறார்.
அப்படியென்றால் இந்தியாவில் புத்தகாயாவை சிங்கள பௌத்தமாகத் தேரரால் அறிவிக்க முடியுமா என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்.. குடும்பத்துடன் வந்த பிரபலம், வீடியோ Cineulagam
