தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை விவகாரம்: சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்வைத்துள்ள கோரிக்கை
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதனுடன் இணைந்துள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முன்மொழிவு அரசியல் சாசனத்திற்கும் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கும் முரணானதாகும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (20.06.2026) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தெல்லிப்பழை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. லட்சுமணராஜா (பவானந்தராஜா) தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதனுடன் இணைந்துள்ள புற்றுநோய் பிரிவை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் எனக் கருத்து வெளியிட்டதாகவும், அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும் ஆதரவு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
நடவடிக்கை
இலங்கையின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் போதனா வைத்தியசாலைகள் மற்றும் விசேட வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வைத்தியசாலைகளும் மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் வருவதாக அரசியல் சாசனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகள் அனைத்தும் மாகாண சபையின் அதிகார வரம்பிற்குள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய அதிகாரங்களை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் அல்லது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மூலம் மாற்ற முடியாது எனவும் குறிப்பிட்டார்.

மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டுமெனில், அதற்கு அரசியல் சாசனத் திருத்தம் அவசியம்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று சட்டத்தைத் திருத்திய பின்னரே அது சாத்தியமாகும். அதற்கு மாறாக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் சட்டவிரோதமானதாகும் என அவர் தெரிவித்தார்.