ஈரான், அமெரிக்காவுடனான சமாதான பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக அறிவிப்பு
ஈரான் அரசாங்கம் அமெரிக்காவுடனான சமாதான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்காவுடன் நடத்தி வந்த அனைத்து மறைமுகப் பேச்சுவார்த்தைகளையும் ஈரான் உடனடியாக நிறுத்தியுள்ளது.
அத்துடன், உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் முக்கியப் புள்ளியாக விளங்கும் 'ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடப்போவதாகவும் ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஈரானின் புரட்சிகர இராணுவப் படைப்பிரிவிற்கு நெருக்கமான 'தஸ்னிம்' (Tasnim) செய்தி நிறுவனம் இன்று இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் தற்காலிகப் போர்நிறுத்தத்தை நீடிப்பதற்கும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் இடைத்தரகர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
இந்நிலையில் இந்த அதிரடி முடிவை ஈரான் எடுத்துள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கைக்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக லெபனான் விவகாரம் இருந்தது. ஆனால், இஸ்ரேல் லெபனானில் தொடர்ந்து போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருவதால், போர்நிறுத்த ஒப்பந்தம் அனைத்து முனைகளிலும் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "ஒரு முனையில் போர்நிறுத்தம் மீறப்பட்டால், அது அனைத்து முனைகளிலும் மீறப்பட்டதாகவே அர்த்தம். அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தம் என்பது லெபனான் உட்பட அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதே" என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கும் அதன் ஆதரவு நாடுகளுக்கும் பாடம் புகட்டும் வகையில், ஈரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பு சில நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்துள்ளன.
சர்வதேச எண்ணெய் போக்குவரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூட ஈரான் திட்டமிட்டுள்ளது.
ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாப் அல்-மந்தப் கடல் எல்லையிலும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் தடைகள் தீவிரப்படுத்தப்படும். லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.