காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டு விவகாரம்! வெளியான அறிக்கை
கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி தேசிய மக்கள் படையினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகள் காலாவதியாகவில்லை என பொலிஸ் பொது பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரினால் கோட்டை நீதவான் திலின கமகேவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி பொலிஸ் மக்கள் தொடர்பு முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளரிடம் கோட்டை நீதவான் திலின கமகே வழங்கிய உத்தரவுக்கு அமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்
அன்றைய தினம் போராட்டத்தின் மீது 26 ஏர் குண்டுகள் மற்றும் 85 கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட வான் குண்டுகள் கொரியாவில் ஜூலை 2019 இல் தயாரிக்கப்பட்டதாகவும், கண்ணீர் புகை குண்டுகள் ஆகஸ்ட் 2020 இல் தயாரிக்கப்பட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் அவை 2024ஆம் ஆண்டு காலாவதியாகும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டத்தில் உயிரிழந்த நிமல் அமரசிறி
மேலும், ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற தினத்தன்று திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தி நிவித்திகல பிரதேச சபையின் வேட்பாளர் நிமல் அமரசிறியின் மரணம் தொடர்பிலான மேலதிக சாட்சியங்கள் இன்று (27) கோரப்பட்டது.
மரணத்தின் போது அவருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிவிதிகல தொகுதியின் ஹொரகொல்ல பிரதேச தேசிய மக்கள் கட்சியின் பொருளாளர் நிமல் விஜேதிலக சாட்சியமளித்திருந்தார்.
பின்னர், விசாரணை மே 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.