அரசியல் கட்சிகளுடன் ஆசிரியர்கள் இன்று முக்கிய பேச்சு
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இன்று சில அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு நேற்றுக் கூடிக் கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தது.
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களைத் தனித்தனியாகச் சந்திப்பதற்கு அமைச்சரவை உப குழு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் கூறியுள்ளார்.




