தலவாக்கலையில் மரம் விழுந்து ஆசிரியர் பலி: தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள்(Photos)
தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலை மல்லியப்பு சந்தியில் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்களின் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.
பிரதேச உயர் பொலிஸ் அதிகாரிகள், ஆசிரியரின் மரணத்திற்கு நீதியைப் பெற்றுத் தருவதாக வழங்கிய உறுதி மொழிக்கமைய போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
எனினும் ஆசிரியரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் போராட்டம் தொடரும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் உள்ள ஆலமரத்தை வெட்டும் பொழுது அதன் கிளைகள் அவ்வீதியினூடாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் ஒருவர் மீது முறிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்த வேலுசாமி மகேஸ்வரன் (வயது 39) 2 பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உயிரிழந்தவருக்கு நியாயத்தைப் பெற்றுத் தருமாறும் கோரியே பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சுமார் 4 மணித்தியாலங்களுக்கும் மேலாகத் தடைப்பட்டது. இதனால் பொது மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை ஆலமரம் உள்ள வீட்டின் உரிமையாளர் லிந்துலை பொலிஸில் சரணடைந்துள்ளார். எவ்வாறாயினும் சந்தேக நபரைக் கைது செய்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மேற்படி ஆலமரத்தை வெட்டி அகற்ற தலவாக்கலை - லிந்துலை நகர சபையிடமோ, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமோ மற்றும் பொலிஸாரிடமோ அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஆலமரத்தை வெட்டிய போதிலும் வாகனங்களை நிறுத்தி அனுப்புவதற்குப் பாதுகாப்பு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆலமரத்தின் கிளை முறிந்து வீழ்ந்தால் அங்குள்ள ஆலயம் ஒன்றுக்கும் சேதமேற்பட்டுள்ளது. அத்துடன் மின்தூண் ஒன்றும் தொலைத் தொடர்பு தூண் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தலவாக்கலை மற்றும் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.







