கடுமையான வீழ்ச்சிப் பாதையில் தேயிலை தொழில்துறை - நெருக்கடியில் சிக்கிய தொழிலாளர்கள்
இலங்கையில் தேயிலைத் தொழில் துறை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேயிலைக் கொழுந்துத் தட்டுப்பாடு மற்றும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 250 தேயிலை தொழில் துறைச்சாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளதாக தேசிய தேயிலை பயிர்ச்செய்கையாளர்கள் சங்கத்தின் தலைவரும், சிரேஷ்ட தேயிலை ஆலோசகருமான சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.
200 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி
இதனால் இந்த ஆண்டுக்கான தேயிலை ஏற்றுமதி இலக்கை அடைவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை ஆண்டுதோறும் சுமார் 220 மில்லியன் கிலோ கிராம் பதப்படுத்தப்பட்ட தேயிலையை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்கிறது.
இதன் மூலம் வருடத்திற்கு 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களும், மாதத்திற்கு 110 முதல் 120 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வருமானமாகப் பெறப்படுகிறது. தற்போது தொழிற்சாலைகள் மூடப்படுவதால் இந்த வருமானம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 30,000 கிலோ தேயிலைக் கொழுந்துகளை அரைத்து உற்பத்தி செய்யும் பல பெரிய தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையைப் சாதகமாக்கிக் கொள்ளும் சில பெரிய அளவிலான தொழிற்சாலை உரிமையாளர்கள், இலங்கை தேயிலைச் சபையின் விலை நிர்ணயங்களை மதிக்காமல், மிகக் குறைந்த விலைக்கு கொழுந்துகளைக் கொள்வனவு செய்து சிறு உற்பத்தியாளர்களைச் சுரண்டுவதாக சமன் கீகனகே கவலை வெளியிட்டுள்ளார்.