மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் - கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இயக்கப்படும் தனியார் சொகுசு வாடகை வாகன சேவைகள், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன.
இந்த நிலை தொடர்ந்தால் ஊழியர்கள் பணி நீக்கம் மற்றும் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்படும் என வாடகை வாகன உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல், விமானக் கட்டண உயர்வு மற்றும் பருவகால மாற்றங்கள் காரணமாக இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளது.
போக்குவரத்து சேவை
இதனால் விமான நிலையப் போக்குவரத்து சேவைகளுக்கான தேவை கடுமையாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில் இந்த துறையை நம்பியிருக்கும் 250 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாடகை வாகன நிறுவனமும் குறைந்தது 12 வாகனங்களையும், அவற்றுக்கான பிரத்யேக கவுண்டர் ஊழியர்களையும் பராமரிக்க வேண்டியுள்ளது.
ஆனால், வருமானம் இல்லாத இந்த இக்கட்டான காலத்திலும் விமான நிலைய அதிகாரிகளுக்கு மாத வாடகையாக 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த வேண்டியிருப்பது தங்களுக்குப் பெரும் சுமையாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
விமான நிலைய வளாகத்திற்குள் இயங்கும் மீட்டர் வாடகை சேவைகளுக்குக் குறைந்த வாடகை மற்றும் விளம்பரக் கட்டணங்களை அதிகாரிகள் விதிப்பதால், சந்தையில் நியாயமற்ற போட்டி நிலவுவதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறைந்த விலை
சில நிறுவனங்களிடம் விளம்பரத்திற்காக 20 லட்சம் ரூபாய் வசூலிக்கும் அதிகாரிகள், சிலருக்குக் குறைந்த விலைக்கு அனுமதி வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நெருக்கடியை சமாளிக்க அடுத்த 3 மாதங்களுக்குத் தங்களது மாத வாடகையில் 50 சதவீதத்தை தற்காலிகமாக தள்ளுபடி செய்யுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. உரிய தீர்வு கிடைக்காவிடில் ஊழியர்களை குறைக்க வேண்டியிருக்கும். அது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.