'மக்கள் மீது வரிகளைச் சுமத்தாமல் மாற்று வழிகளைக் கையாளுங்கள்': ரிசாட் பதியுதீன் வேண்டுகோள்
நாளுக்கு நாள் வாழ்க்கை செலவு அதிகரிப்பால் வாழ வழியின்றி தவிக்கும் மக்கள் மீது வரிகளைச் சுமத்தாமல் மாற்று வழிகளைக் கையாளுமாறு அரசாங்கத்திடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நேற்றைய தினம் (16.02.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "மின்சாரக் கட்டணம் இலங்கையில் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
ஜனாதிபதியின் பல தவறுகள்
இவ்வாறான அழுத்தங்களால் மக்கள் எப்படி வாழ்க்கை நடத்துவது என்று திண்டாடுகின்றனர். கடந்த ஆட்சியாளர்களின் தவறுகள், பிழையான வழிநடத்தல்கள் மற்றும் அநியாயங்களினாலேயே எமது நாடு இன்று குட்டிச்சுவராகி, அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது.
அவ்வாறானவர்களைச் சேர்த்துக்கொண்டே ஜனாதிபதி ஆட்சியை நடத்துகின்றார். அவர்களைப் பகைக்காமல் பாதுகாக்கும் நிலையை ஏற்படுத்தி ஜனாதிபதி பல தவறுகளை மேற்கொள்கின்றார். இது நாட்டுக்குச் செய்கின்ற பாரிய துரோகமாகும்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் மீது வரிகளைச் சுமத்துகின்றனர்.
கடந்த கால ஆட்சியாளர்கள் மேற்கொண்ட தவறுகளால் ஏற்பட்ட நஷ்டத்தை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முயற்சிப்பது பாரிய அநியாயமாகும். எனவே, மக்கள் மீது சுமைகளைச் சுமத்துவதை விடுத்து, கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்களிடமிருந்து பெற வேண்டியதைப் பெற்று மக்களைப் பாதுகாக்க வேண்டும்.
இலங்கை மக்கள் காங்கிரஸ் வேண்டுகோள்
மேலும், உரிய நேரத்துக்குத் தேர்தலை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரசாங்கமும் தேர்தல் ஆணைக்குழுவும் தனித்தனியாகப் பிரிந்து செயல்படுவது போன்றே எண்ணத் தோன்றுகின்றது.
மக்களின் வாக்குரிமையை அறிந்து, ஜனநாயகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
எனவே, அரசாங்கம் தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து, எதிர்வரும் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கின்றது" எனக் குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
